விரைவில் ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடர்; பேட்டிங் பயிற்சியைத் தொடங்கிய ரோஹித் சர்மா!
இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் பயிற்சியை தொடங்கியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கடந்த ஆண்டு இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பின், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக யாரும் எதிர்பாராத விதமாக டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சியளித்தார்.
சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றபோதிலும், ஒருநாள் போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடுவார் எனத் தெரிகிறது. வருகிற அக்டோபர் மாதத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அந்த தொடரில் இந்திய அணியை ரோஹித் சர்மா கேப்டனாக வழிநடத்துவார் எனத் தெரிகிறது.
பயிற்சியை தொடங்கிய ரோஹித் சர்மா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா இந்திய அணியின் முன்னாள் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை மனதில் வைத்தே ரோஹித் சர்மா முன்கூட்டியே பயிற்சியைத் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்குப் பிறகு, ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக இளம் வீரர் ஷுப்மன் கில் நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடர் தொடங்கும் முன்பு இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் மற்றொரு மூத்த வீரரான விராட் கோலி, அவர் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்ட இன்ஸ்டாகிராம் பதிவை அண்மையில் பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஆஸி.யின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி; தென்னாப்பிரிக்கா அபாரம்!