குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் இரு மசோதாக்கள்!
விளையாட்டு வீரர்களின் நலன்களை முதன்மைப்படுத்தும் வகையிலான தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா 2025 மாநிலங்களவையில் இன்று (ஆக. 12) நிறைவேற்றப்பட்டது.
இந்திய விளையாட்டு நிர்வாகத்தில் இதுவொரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக கருதப்படுகிறது.
இதேபோன்று, உலக ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பின் தேவைக்கேற்ப, சுயாட்சியை வலுப்படுத்தும் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு திருத்த மசோதாவும் நாடாளுமன்றத்தில் இன்று (ஆக. 12) நிறைவேற்றப்பட்டது.
இந்த இரு மசோதாக்களும் தற்போது, சட்டங்களாக அறிவிக்கப்படுவதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படவுள்ளன.
பிகாரின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், பிற்பகல் 3 மணியளவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றினார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால், ஆளும் கட்சி உறுப்பினர்களின் பெரும்பான்மையுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதேபோன்று, மக்களவையில் இன்று முன்னதாக இந்திய துறைமுக மசோதா 2025 நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிக்க | குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர்: ஆக. 18-ல் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை