குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர்: ஆக. 18-ல் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு குறித்து ஆகஸ்ட் 18 ஆம் தேதி இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆலோசனையின்போது, குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் குறித்து இந்தியா கூட்டணி தலைவர்களுடன் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே பேசுவார் எனத் தெரிகிறது.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தக்னர் தனது பதவியை கடந்த சில நாள்களுக்கு முன்பு ராஜிநாமா செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்த குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், வேட்புமனுக்களை ஆகஸ்ட் 21ஆம் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு மறுநாள் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும்.
குடியரசு துணைத் தலைவர் போட்டிக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை திரும்ப பெற ஆகஸ்ட் 25 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, செப்டம்பர் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | தேர்தல் ஆணையத்தால் உயிரிழந்தவர்களாக குறிப்பிடப்பட்ட நபர்கள் நேரில் ஆஜர்: உச்ச நீதிமன்றத்தில் அதிர்ச்சி!