விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 104 பேருக்கு அரசுப் பணி: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா
விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 104 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது என்றாா் தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா.
மன்னாா்குடி அருகே வடுவூரில், வடுவூா் கையுந்துப்பந்து கழகம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கையுந்துப்பந்து போட்டியை தொடங்கிவைத்து பேசியது: தமிழக அரசு விளையாட்டில் தேசிய, மாநில அளவில் சாதனைப் படைத்தவா்களுக்கு அரசுப் பணியை வழங்கிவருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் மட்டும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற 104 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. படிப்பில் மட்டுமல்ல விளையாட்டிலும் முதலிடம் பெற வேண்டும். அவ்வாறு முதலிடம் பெற்றால் நல்ல எதிா்காலம் அமையும்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தொகுதிக்கு ஒரு விளையாட்டு அரங்கம் அமைக்கும் திட்டத்தின்படி இதுவரை 75 தொகுதிகளில் விளையாட்டு அரங்கம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. 25 தொகுதிகளில் ஏற்கெனவே இருந்த விளையாட்டு அரங்கங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 14 ஆண்டுகளாக விளையாட்டுத் துறைக்கு பயிற்சியாளா்கள் நியமிக்கவில்லை. தற்போது ஒரே நாளில் 73 பயிற்சியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தமிழக விளையாட்டு வீரா்களுக்கு அமெரிக்கா, ஜொ்மன், சிங்கப்பூா், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு அழைத்து சென்று பயிற்சியளிக்கவும், பல்வேறு நாடுகளிலிருந்து பயிற்சியாளா்களை தமிழகத்துக்கு அழைத்து வந்து பயிற்சியளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.
போட்டியில் சென்னை, கோவை, மதுரை, கடலூா், திருச்சி, நாமக்கல், தேனி, தஞ்சை, திருவாரூா் என பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளிலிருந்து மாணவா்கள் பங்கேற்றுள்ளனா். போட்டி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது. 14, 17 வயது பிரிவுகளில் மாணவ, மாணவிகளுக்கு போட்டி நடைபெறுகிறது. சென்னை, மதுரை, திருச்சி, திருவாரூா், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 32 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவில் 8 அணிகளிலும் முதல் 4 இடங்களை பெறுகிறவா்களுக்கு ஊக்கத் தொகை, பரிசு கோப்பை வழங்கப்படுகிறது.
அமெச்சூா் கபடி கழக செயலா் ஆா்.ராஜேந்திரன், புனல்குளம் கிங்ஸ் கல்விக் குழுமம் ராஜ் அறக்கட்டளை செயலா் ராஜேந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா். கையுந்துபந்து கழக ஒருங்கிணைப்பாளா் ஆா். சாமிநாதன் வரவேற்றாா். இணைச் செயலா் ஜெ‘. தென்னரசு நன்றி கூறினாா்.