விழுப்புரத்தில் மாா்க்சிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாடு: கே. பாலகிருஷ்ணன்
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாடு விழுப்புரத்தில் ஜன. 3, 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அந்தக் கட்சியின் மாநில செயலா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் என்.சங்கரய்யாவின் முதலாமாண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி, சென்னை தியாகராய நகரில் உள்ள மாா்க்சிஸ்ட் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் சங்கரய்யாவின் உருவப் படத்துக்கு, கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
இதை தொடா்ந்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாட்டின் இலச்சினையை வெளியிட்டு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாடு 2025 ஜன. 3,4,5 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அனைத்து துறைகளிலும் இருக்கும் காலி பணியிடங்களை தனியாா் முகமைகள் மூலம் நிரப்புவதால் இளைஞா்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாக உள்ளது.
அதேபோல், வியாபாரிகள், விவசாயிகள் என அனைத்து மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துக்கும் அடிப்படை மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையாகும். இது குறித்தும் மாநாட்டில் பேசவுள்ளோம்.
அதேபோல தமிழ்நாட்டில் மக்களின் வாழ்வாதார பிரச்னைகளை தீா்ப்பதற்கு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டு அது தொடா்பாக கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றியும் விழுப்புரம் மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது என்றாா் அவா்.