விழுப்புரம்: `எங்கள் பொருட்கள் கலப்படமற்ற உணவைப் போன்றது!’ - பசுமை தயாரிப்பில் அசத்தும் பெண்கள்
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இறங்கி பேருந்துகள் வெளியேறும் வழியில் நடந்தால், சில அடி தூரத்திலேயே வீசும் நறுமணம் நம்மை தடுத்து நிறுத்துகிறது. வாசம் வீசும் பக்கம் திரும்பினால் `மகளிர் சுய உதவிக் குழு தயாரிப்புகளின் விற்பனை வளாகம்’ என்ற பேனர் நம்மை வரவேற்றன.
அந்த அங்காடிக்குள் குடும்பத்துடன் நுழைபவர்கள் பொருட்களுடன் மகிழ்ச்சி பொங்க வெளியேறுவதைப் பார்த்த நாம், அந்த அங்காடிக்குள் நுழைந்தோம். முன்பைவிட இன்னும் வாசனை மூக்கை துளைத்தெடுத்தது.
அங்கு தனித்தனிக் குழுவாக பிரிக்கப்பட்டிருந்த ஸ்டாலிகளில், இயற்கை முறையில் வீட்டுத் தயாரிப்பில் செய்யப்பட்ட சத்து மாவு, குளியல் சோப்பு, ஹேர் ஆயில், கற்பூரம், வத்தி, சாம்பிராணி, ஜூட் பைகள், அலங்காரப் பொருட்கள், தாம்பூலப் பைகள், மரப் பொருட்கள், ஊறுகாய்கள் போன்றவை நேர்த்தியாக காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.

அந்தப் பொருட்களை ஆர்வமுடன் பார்க்கும் மக்கள், அதன் விலையைக் கேட்டு வியந்து வாங்கிச் செல்கிறார்கள். தன் குழந்தைகளுடன் குளியல் சோப்புகளை வாங்கிக் கொண்டிருந்த வளவனூரைச் சேர்ந்த மல்லிகாவிடம் பேசியபோது, ``இப்பல்லாம் நல்ல பொருளுங்க எங்க கிடைக்குது ? எல்லாத்துலயும் கலப்படம்தான்.
பப்பாளி, பாதாம்லாம் போட்டு சோப்பு தயாரிக்கறோம்னு விளம்பரப்படுத்தறாங்க. ஆனால் விக்கற விலைவாசில இதல்லாம் போட்டு தயாரிக்கற சோப்பை, இவ்ளோ விலை கம்மியா எப்படி அவங்களால கொடுக்க முடியும் ? எல்லாமே கெமிக்கல்தான். எதையும் நம்பி வாங்க முடியல.
அதனாலதான் இங்க சோப்பையும் ஷாம்பையும் வாங்கறேன். ரெண்டு நாளுக்கு முன்னாடி ஒரு சோப்பு வாங்கிட்டுப் போய் யூஸ் பண்ணேன். ரொம்ப நல்லா இருந்துச்சி. எல்லாமே இயற்கை முறையில்தான் செய்திருக்காங்க. அதனாலதான் இப்போ வந்து வாங்கறேன்” என்கிறார்.
சுய உதவிக் குழு பெண்களிடம் பேசியபோது, ``விழுப்புரம் மாவட்டத்துல இருக்கற எங்களைப் போல சுய உதவிக் குழுக்களை ஒன்றிணைத்து, அவங்களை இயற்கைப் பொருட்கள் தயரிக்கற இடத்துக்கு `கம்யூனிட்டி ஸ்கில் ஸ்கூல்’ மூலமா எங்களை அனுப்பி பயிற்சி கொடுப்பாங்க. அங்க கத்துகிட்ட பிறகு அதைத் தயாரிக்கறதுக்கும் அரசே எங்களுக்கு உதவி பண்ணும்.
அப்படி தயாரிக்கிற பொருட்களை மாவட்டம் முழுக்க ஸ்டால்கள் வச்சு விற்பனை செய்வோம். படிக்காத எங்களுக்கு எதாவது வருமானம் கிடைக்கும்னுதான் இதுல சேர்ந்தோம். ஆனால் இப்போ இந்த வருமானத்துல எங்க புள்ளைங்கள நல்லா படிக்க வச்சோம். இப்போ அவங்க டிகிரி படிக்கறாங்க. சொந்தமா இடம் வாங்கி வீடு கட்டியிருக்கோம். எல்லாம் இதுல நாங்க சம்பாதிக்கிற வருமானத்துலதான். அம்மா செய்யற சாப்பாட்டுல கலப்படம் இருக்காது.
எங்கள் பொருட்களும் கலப்படமற்ற உணவைப் போன்றது. இங்க இருக்கற 50 பேருமே அம்மாக்கள்தான். அதனால அனைத்தையும் 100% இயற்கை முறையில தயாரிக்கறோம். போன வாரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரில ஸ்டால் போட்டோம். அங்க படிக்கற பசங்க மட்டும் இல்லாம மக்களும் ஆர்வமா வந்து வாங்கிட்டுப் போனாங்க” என்கின்றனர் நெகிழ்ச்சியுடன்.

இந்தக் குழுவை வழிநடத்தும் மாவட்ட விநியோகம் மற்றும் சந்தைப்படுத்துதல் சமூகத்தின் தலைவர் (DSMS) செந்தில்குமாரிடம் பேசியபோது, ``1989-ல் தர்மபுரியில் முதன்முதலாக தொடங்கிய திட்டம் இது.
பெண்கள் தங்களோட வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு வாய்ப்புகள் அளிக்கவும், பொருளாதார ரீதியில் அவர்கள் வலிமை பெறவும், சமூகத்தில் தங்களின் அடையாளத்தை உருவாக்கவும்தான் இந்தத் திட்டத்தின் நோக்கம். இந்தத் திட்டத்தின் மூலமாக ஆயிரக்கணக்கான பெண்கள் தங்களது சொந்தக் காலில் நிற்கிறார்கள்.
இது CSS (Community skill School) என்ற தேசிய அளவிலான திட்டத்தின் கீழ் செயல்படுகிறது. இதன் மூலம் குழுவிலுள்ள பெண்களுக்கு தொழிற்பயிற்சிகள், நிதியுதவிகள், மற்றும் விற்பனை வாய்ப்புகள் ஆகியவை தரப்பட்டு, அவர்களைத் தொழில் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறது“ என்றார்.