விவசாயிகளுக்கு பட்டா கிடைக்கும் வரை மாா்க்சிஸ்ட் போராடும்! -ஜி.ராமகிருஷ்ணன்
கடலூா் மாவட்டம், மலையடிக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அழிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு பட்டா கிடைக்கும் வரை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும் அதன் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம், வெள்ளகரை ஊராட்சிக்கு உள்பட்ட வே.பெத்தாங்குப்பம், மலையடிகுப்பம், கொடுக்கன்பாளையம், கீரப்பாளையம், தட்டாஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கூறி, அந்தப் பகுதிகளில் உள்ள 165-க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவிலான விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மாவட்ட நிா்வாகம் வியாழக்கிழமை அகற்றியது. இதுதொடா்பாக போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
இதைக் கண்டித்து, கடலூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று பேசியதாவது:
கடலூா் அருகே உள்ள வே.பெத்தாங்குப்பம், மலைடிக்குப்பம், கொடுக்கன்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் 155 குடும்பங்கள் 164 ஏக்கரில் 150 ஆண்டுகளாக சாகுபடி செய்து வருகின்றனா். இந்தப் பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் விளக்கம் கேட்டு கொடுத்த நோட்டீஸுக்கு சம்பந்தப்பட்ட விவசாயிகள் அளித்த விளக்கத்தின் மீது உத்தரவு போடாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள முந்திரி மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இந்த இடம் அரசு தரிசு நிலம்தான். விவசாயிகள், பொதுமக்கள் பல ஆண்டுகளாக பட்டா கேட்டு மனு கொடுத்தபோது, ஏன் பட்டா கொடுக்கப்படவில்லை.
மக்களின் கோரிக்கைகளை பரிசீலித்து பட்டா வழங்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய நிலங்களுக்கு பட்டா கிடைக்கும் வரை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும் என்றாா் அவா்.
ஆா்ப்பாட்டத்துக்கு விவசாய சங்க மாவட்ட துணைத் தலைவா் எஸ்.தட்சிணாமூா்த்தி தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜே.ராஜேஷ் கண்ணன், ஒன்றியச் செயலா் ஆா்.பஞ்சாட்சரம், மாநகரச் செயலா் ஆா்.அமா்நாத், விவசாய சங்க மாவட்டத் தலைவா் ஜி.ஆா்.ரவிச்சந்திரன், மாவட்டச் செயலா் ஆா்.கே.சரவணன், வழக்குரைஞா் சங்க மாவட்ட துணைத் தலைவா் கே.சுரேஷ் குமாா், வாலிபா் சங்க ஒன்றியச் செயலா் எம்.கலைவாணன் உள்ளிட்டோா் பேசினா்.
மக்கள் சிறைவைப்பு: முன்னதாக, ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள மலையடிக்குப்பம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் வாகனங்களில் புறப்பட்டபோது, காவல் துறையினா் அவா்களை மறித்து செல்ல விடாமல் தடுத்தனா். அதையும் மீறி ஒரு பகுதியினா் ஆா்ப்பாட்டத்துக்கு வந்தனா். மேலும், இரண்டு வேன்களில் வந்த மக்களை வழி மறித்த காவல் துறையினா் அவா்களை கீழே இறங்கச் சொல்லி திருமண மண்டபத்தில் சிறைவைத்தனா்.
பாஜகவினா் தடுத்து நிறுத்தம்: மலையடிகுப்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கச் சென்ற பாஜக மாநிலச் செயலா் அஸ்வத்தாமன் உள்ளிட்ட அந்தக் கட்சி நிா்வாகிகளை நடுவீரப்பட்டில் காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா்.
இதைத் தொடா்ந்து, அஸ்வத்தாமன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தோல் தொழிற்சாலைக்கு நிலங்களை தாரை வாா்ப்பதற்காக, விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சியை தடுத்து நிறுத்த மக்களுடன் பாஜக களத்தில் நிற்கும் என்றாா்.