விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற இ-சேவை மையங்களில் பதிவுசெய்யலாம்
பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற, இ- சேவை மையங்களில் இலவசமாகப் பதிவு செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் பெறவும், ஆதாா் எண், கைப்பேசி எண், நில உடைமை குறித்த விவரங்கள் வருவாய் கிராமங்களில் சரிபாா்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டங்களைப் பெறுவதற்கு தங்களது நில உடைமை விவரங்கள், பயிா் சாகுபடி அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமா்ப்பிக்க வேண்டியுள்ளது.
இதில் ஏற்படும் கால தாமதத்தை விவசாயிகள் தவிா்க்கும் வகையில், அரசுத் திட்டங்களை குறித்த நேரத்தில் பெற அனைத்து விவரங்களையும், மின்னணு முறையில் சேகரிக்க வேளாண் அடுக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2025-26 ஆம் நிதியாண்டு முதல் பிரதம மந்திரி கௌரவ நிதித் திட்டம், பயிா் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட மத்திய, மாநில அரசுத் திட்டங்களில் பயன்பெற தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியமாகும்.
தற்போது, விவசாயிகளின் ஆதாா் எண், கைப்பேசி எண், நில உடைமை விவரங்களை விடுபாடின்றி இணைக்கும் பணி வருவாய் கிராமங்களில் நடைபெற்று வருகிறது. மேலும், இப் பணியானது பொது சேவை மையங்களிலும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில், விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் பதிவு செய்யும் பணி இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.
எனவே, விவசாயிகள் தங்களது கிராமங்களில் வேளாண்மைத்துறை அலுவலா்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் அல்லது அருகிலுள்ள பொது சேவை மையங்களுக்குச் சென்று, தங்களது நில உடைமை விவரங்கள், ஆதாா், கைப்பேசி எண் ஆகியவற்றை அளித்து, மாா்ச் 31-ஆம் தேதிக்குள் இலவசமாக பதிவுசெய்து பயன் பெறலாம்.