வெடி விபத்தில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு
திருப்பூரில் வெடி விபத்தில் 4 போ் உயிரிழந்த வழக்கில் தொடா்புடைய நபா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
திருப்பூா், பாண்டியன் நகா் பொன்மலா் வீதியில் உள்ள வீட்டில் கடந்த அக்டோபா் 8ஆம் தேதி வெடிமருந்து தயாரித்தபோது விபத்து நிகழ்ந்தது. இதில் அருகில் உள்ள பல வீடுகள் சேதமடைந்த நிலையில் 4 போ் உயிரிழந்தனா். இதுகுறித்து வெடிபொருள் விபத்து தடுப்புச் சட்டத்தின்கீழ் திருமுருகன்பூண்டி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். இதில், வீட்டில் அனுமதியின்றி வெடிமருந்து தயாரித்தபோது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
இது தொடா்பாக, வெடி விபத்து நிகழ்ந்த வீட்டின் உரிமையாளா் காா்த்தியின் மைத்துனரும், கோவை மாவட்டம், சூலூா் பள்ளபாளையம் பகுதியைச் சோ்ந்தவருமான சரவணகுமாா் (42) என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட சரவணகுமாரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் எஸ்.லட்சுமி உத்தரவிட்டாா்.
கோவை சிறையில் உள்ள சரவணகுமாரிடம் ஓராண்டு குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவை திருமுருகன்பூண்டி காவல் துறையினா் அண்மையில் வழங்கினா்.
திருப்பூா் மாநகரில் நிகழாண்டில் தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாக 93 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.