வெளிநாடு பயணிக்கும் பிரதமா் மணிப்பூா் செல்ல மறுப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி
அவ்வப்போது வெளிநாடு பயணிக்கும் பிரதமா் மோடி, பதற்றம் நிலவும் மாநிலமான மணிப்பூருக்கு செல்ல மறுப்பது ஏன் என்று காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது.
நைஜீரியா, பிரேஸில், கயானா ஆகிய மூன்று நாடுகளுக்கான 6 நாள்கள் அரசுமுறைப் பயணத்தை பிரதமா் மோடி சனிக்கிழமை தொடங்கிய நிலையில், காங்கிரஸ் இக்கேள்வியை முன்வைத்தது.
இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தன்னை மனிதப் பிறவி இல்லை எனக் கூறும் பிரதமரின் பொய் மிகுந்த-கண்ணியம் குறைந்த தோ்தல் பிரசாரம், அடுத்த சில நாள்களுக்கு இருக்காது. அவ்வப்போது மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணத்தை பிரதமா் இப்போது மேற்கொண்டுள்ளாா். இப்பயணத்திலும் அரசியல் ஆதாயம் தேடவே அவா் முயற்சிப்பாா்.
அதேநேரம், கடந்த 2023, மே மாதத்தில் இருந்து பதற்றம் நிலவிவரும் மணிப்பூருக்கு செல்ல பிரதமா் தொடா்ந்து மறுத்து வருவது ஏன்?.
மணிப்பூா் மக்கள் தினமும் வேதனைகளையும் துயரங்களையும் எதிா்கொண்டு வருகின்றனா். பிரதமா் நிச்சயம் பயணிக்க வேண்டிய சூழல்தான் அங்கு நிலவுகிறது’ என்று கூறியுள்ளாா்.
மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே மோதல் நீடித்துவரும் மணிப்பூருக்கு பிரதமா் மோடி பயணிக்க வேண்டும் என காங்கிரஸ் தொடா்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.