செய்திகள் :

வேங்கை வயல்: "100க்கும் மேற்பட்ட சாட்சிகள், ஆவணங்கள், உரையாடல்கள்..." - தமிழக அரசு சொல்வதென்ன?

post image

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக காவல்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகைக்கு எதிராக அரசியல் தலைவர்கள் பலரும் குரலெழுப்பி வரும் நிலையில் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

பட்டியலின இளைஞர்கள் மூன்று பேர்தான் இந்த குற்றத்தில் ஈடுபட்டது என்கிறது குற்றப்பத்திரிகை. வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், சி.பி.ஐ.எம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பலர் காவல்துறையின் குற்றப்பத்திரிகையில் சந்தேகம் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

இந்தநிலையில், "புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் சம்பவத்தில், தனிப்பட்ட விரோதம் காரணமாகவே 3 பேர் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் - தமிழக அரசு வேண்டுகோள்" என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அரசு.

thirumavalavan - ranjith
thirumavalavan - ranjith

அரசின் விளக்க அறிக்கை:

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாகக் கடந்த 2022 டிசம்பர் மாதம் புகார்கள் எழுந்தன. இக்கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் சிலர் வாந்தி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், காவேரி நகர் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறிப் பார்த்ததில், மேல்நிலை நீர்த்தேக்க நீரில் மலக்கழிவுகள் மிதப்பதாகவும் தெரிவித்ததைத் தொடர்ந்து, இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், வெள்ளானூர் காவல் நிலையத்தில் Cr.No.239/2022-ல் 26.12.2022 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டின் தீவிரத்தையும், சமூக முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் இவ்வழக்கின் புலன் விசாரணையை 14.01.2023 அன்று தமிழ்நாடு குற்றப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றினார். அதைத் தொடர்ந்து, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை கூடுதல் காவல் துறை இயக்குநர், அவர்கள் உத்தரவின் பேரில், துணைக் காவல் கண்காணிப்பாளர் நிலையிலான அதிகாரியைப் புலனாய்வு அதிகாரியாக நியமித்து, புதுக்கோட்டை குற்ற எண்.01/2023-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையின்போது, புகார்தாரர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டதோடு, ஏராளமான ஆவணங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதைத் தவிர, பல நபர்களின் அலைபேசி எண்கள் மற்றும் தொலைத்தொடர்பு தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. வேங்கைவயல், எறையூர் கிராம மக்களிடம் இதற்கான பல்வேறு காரணங்கள் குறித்தும் விரிவாக விசாரிக்கப்பட்டது. மேலும், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சில நபர்களிடமிருந்து உயிரியல் மாதிரிகள் எடுக்கப்பட்டு, விரிவான டி.என்.ஏ பகுப்பாய்வும் செய்யப்பட்டது.

வேங்கை வயல்
வேங்கை வயல்

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை மற்றும் பகுப்பாய்வுகளின் அடிப்படையில், பின்வரும் விவரங்கள் உறுதி செய்யப்பட்டன:

* சம்பவம் நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, 02.10.2022 அன்று வேங்கைவயலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்காக முத்துக்காடு ஊராட்சித் தலைவர் பத்மா என்பவரின் கணவர் முத்தையா என்பவர் கிராமசபைக் கூட்டத்தின் போது, தமிழ்நாடு காவல் துறை ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றும் காவலர் முரளிராஜாவின் தந்தை ஜீவானந்தம் என்பவரை அவமானப்படுத்தும் விதமாகத் திட்டியுள்ளார். இச்சம்பவத்திற்குப் பழிவாங்கும் வகையில் முரளிராஜாவால் இச்செயல் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்டது என்பது காவல் துறையின் விசாரணையின் மூலம் ஆதாரப்பூர்வமாகப் புலனாகியுள்ளது.

* மேலும், இச்சம்பவத்தில் முரளிராஜா, சுதர்ஷன், முத்தையா, ஆர்.முத்துகிருஷ்ணன் மற்றும் பலரின் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு, தமிழ்நாடு தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது, அவற்றில் இந்தச் சம்பவம் தொடர்பான பல புகைப்படங்களும், உரையாடல்களும் அழிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்தத் தகவல்கள் அனைத்தும் தொழில்நுட்ப உதவியோடு மீட்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில், இச்சம்பவத்தில் அவர்களுக்குள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டது.

அரசு அறிக்கை பக்கம் 1
2
3

* இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் பெறப்பட்ட புகைப்படங்கள், செல்போன் உரையாடல்கள், வீடியோ ஆதாரங்கள், தடயவியல் அறிக்கை, மருத்துவ அறிக்கைகள், புலனாய்வு அதிகாரியால் செய்யப்பட்ட செயல்முறை விளக்கங்களின் முடிவுகள், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அறிக்கை, வல்லுநர்களின் கருத்துகள் மற்றும் சாட்சிகளின் அறிக்கைகள் ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்ததின் அடிப்படையில், புலன் விசாரணை முடிக்கப்பட்டு (i) திரு. முரளிராஜா, த/பெ. ஜீவாநந்தம், 32/23, வேங்கைவயல், (ii) திரு. சுதர்ஷன் 20/23, த/பெ. பாஸ்கரன், வேங்கைவயல் மற்றும் (iii) திரு. முத்துகிருஷ்ணன் 22/23, த/பெ. கருப்பையா, வேங்கைவயல் ஆகியோரின் மீது, 20.01.2025 அன்று நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே, இதுதொடர்பாக தவறான தகவல்களை யாரும் பரப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது." என்று கூறப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளில் ரூ.10 லட்ச கோடி கடனைத் தள்ளுபடி செய்த பாஜக அரசு... யாருடையது தெரியுமா? - கெஜ்ரிவால்

டெல்லி தேர்தல் அடுத்த மாதம் நடக்கவிருக்கிறது. தற்போது நடந்துவரும் தேர்தல் பிரசாரத்தில் பாஜக ஆம் ஆத்மியை சாடுவதும், ஆம் ஆத்மி பாஜக மேல் குற்றம் சுமத்துவதும் அதிகமாகவும், பரபரப்பாகவும் நடந்துவருகிறது.இந... மேலும் பார்க்க

Trump: `அதிபரான டிரம்பினால் பகுதி நேர வேலையை விட்டு அல்லல்படும் மாணவர்கள்' - காரணம் என்ன?!

அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டிரம்ப் 'எப்போது... என்ன சட்டம் கொண்டுவரப் போகிறார்?' என்று உலக நாடுகள் தொடங்கி அமெரிக்காவில் படிக்கும் மாணவர்கள் வரை ஒருவித பதற்றத்திலேயே இருந்து வருகின்றனர்.டிரம்ப் தன... மேலும் பார்க்க

"நாங்க ரெடி. .. வாங்க சந்திப்போம்!”-எடப்பாடி பழனிசாமிக்கு சவால்விட்ட செந்தில் பாலாஜி

கரூர் மாவட்ட மாணவர் அணி சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கரூர் உழவர் சந்தை எதிரில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “சிறிய மாவட்டமாக இரு... மேலும் பார்க்க