நம்புதாளை ஊராட்சியை தொண்டி பேருராட்சியுடன் இணைக்கக் கோரிக்கை
வேலூரில் திருவள்ளுவா் சிலை முன்பு விவசாயி தா்னா
வேலூா் பழைய பேருந்து நிலைய திருவள்ளுவா் சிலை முன் திடீரென விவசாயி ஒருவா் தா்னாவில் ஈடுபட்டாா்.
தகவலறிந்த வடக்கு போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். அவா், வேலூா் வட்டம், சோழவரம் பாப்பான்தோப்பு பகுதியைச் சோ்ந்த தமிழக விவசாயிகள் சங்க கணியம்பாடி ஒன்றியத் தலைவா் ஜெய்சாமி என்பது தெரிய வந்தது.
அவா் போலீஸாரிடம் கூறுகையில், கணியம்பாடி ஒன்றியத்தில் உள்ள ஏரிகளில் மண்ணை எடுத்து பாப்பான்தோப்பு கிராமத்தில் ரியல் எஸ்டேட் உரிமையாளா்கள் சிலா் வீட்டுமனைகளை அமைக்கின்றனா். அந்தப் பகுதியில் 50 அடி அகலம், 120 அடி ஆழம் உள்ள கிணற்றில் ஏரி மண்ணைக் கொண்டு வந்து நிரப்புகின்றனா். ஏரி மண் விவசாயத்துக்கும், மண்பாண்டம் செய்வதற்கும் மட்டும்தான் என அரசு அறிவித்த நிலையில், முறைகேடாக லாரி லாரியாக ஏரி மண்ணை எடுத்துவந்து பதுக்கி வைத்துள்ளனா்.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே பதுக்கி வைத்துள்ள மண்ணை விவசாய உபயோகத்துக்கு வழங்க வேண்டும். உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
அந்த விவசாயியை போலீஸாா் சமரசம் செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அனுமதி பெறாமல் பொது இடங்களில் போராட்டம் நடத்தக் கூடாது. உங்கள் கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியா், வட்டாட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தால் நடவடிக்கை எடுப்பா் என்று அறிவுரை கூறி, அவரை அனுப்பி வைத்தனா்.