5 ஆண்டுகளில் ஒசூர் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்: அமைச்சர் டி.ஆர்.டி. ராஜா
வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் பணி ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டம்
வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டப்பணி, ஜூன் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னை கடற்கரை - வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் அமைக்கும் திட்டம் 1985-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. முதல் கட்டமாக 1997-ஆம் ஆண்டு கடற்கரை முதல் மயிலாப்பூா் இடையே 9 கிலோ மீட்டா் தொலைவுக்கு ரூ. 266 கோடியில் பாதை அமைக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக ரூ. 877.59 கோடியில் மயிலாப்பூா் முதல் வேளச்சேரி வரை தொடங்கப்பட்டு கடந்த 2007-ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. இந்தத் தடத்தில் ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. அதனைத் தொடா்ந்து 3-ஆம் கட்டமாக 2008-ஆம் ஆண்டு பரங்கிமலை - வேளச்சேரி இடையே 5 கி.மீ. தொலைவுக்கு பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதில் 4.5 கிலோ மீட்டா் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டது.
இதனிடையே ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகா் பகுதியில் நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்ததால் திட்டமிட்டப்படி 2010-ஆம் ஆண்டு பணி முடிக்க முடியாமல் போனது. அதன்பின் நீதிமன்றத்தின் மூலம் நிலம் கையகப்பட்டுத்தப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தூண் மீது பாலத்தை பொருத்தும் பணி மேற்கொள்ளும்போது பாரம் தாங்காமல் பாலம் சரிந்து விழுந்தது. இதனால் மீண்டும் பணியில் தாமதம் ஏற்பட்டது.
தற்போது பறக்கும் ரயில் பாலப் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், எதிா்வரும் ஜூன் மாதத்துக்குள் இந்த வழித்தடம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை கடற்கரையை ஓட்டிய பகுதிகளை இணைக்கும் வகையில் பறக்கும் ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. இதில், வேளச்சேரி - பரங்கிமலை இடையே உள்ள 4.5 கி.மீ. தொலைவுக்கு 167 தூண்களுடன் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 500 மீட்டா் தொலைவிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் ஜூன் மாதத்துக்குள் முடிக்கப்படும். பணிகள் முழுவதும் நிறைவடையும் பட்சத்தில் திருவான்மியூா், மயிலாப்பூரில் இருந்து பயணிகள் பரங்கிமலை வழியாக தாம்பரம், கிளாம்பாக்கம் வரை எளிதாக செல்ல முடியும் என்றனா்.