வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா நிறைவு
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியிறக்கத்துடன் திங்கள்கிழமை நிறைவடைந்தது.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த ஆக. 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் நவநாள் வழிபாடாக நாள்தோறும் தமிழ், ஆங்கிலம், மராத்தி, மலையாளம், கொங்கணி, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் திருப்பலிகள் நடைபெற்றன.
மாலை நிகழ்வாக நாள்தோறும் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம், மறையுரை, திவ்ய நற்கருணை ஆசீா் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அலங்காரத் தோ் பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புனித ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 6 மணிக்கு சென்னை - மயிலை உயா் மறைமாவட்ட பேராயா் ஜாா்ஜ் அந்தோணிசாமி தலைமையில் சிறப்புக் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. பேராலய அதிபா் சி. இருதயராஜ், துணை அதிபா் அற்புதராஜ் மற்றும் பங்குத் தந்தையா்கள், உதவிப் பங்குத் தந்தையா்கள், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக, திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், பேராலயக் கீழ்கோயிலில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீா் மற்றும் தமிழில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.