வேள்பாரி : "என்ன விலையிலும் திசைமாற மாட்டான் பாரி; தமிழ்நாடும் அப்படித்தான்" - ரோகிணி
சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி-யுமான சு. வெங்கடேசன் எழுத்து மற்றும் ஓவியர் மணியம் செல்வன் ஓவியத்துடன் விகடன் பிரசுரத்தில் வெளியாகி `வீரயுக நாயகன் வேள்பாரி' நாவல், விற்பனையில் ஒரு லட்சம் பிரதிகளைக் கடந்ததை முன்னிட்டு, விகடன் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று `வெற்றிப் பெருவிழா' நடைபெற்றது.
மாலை 5:30 மணியளவில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் நாவலாசிரியர் சு. வெங்கடேசன், நடிகர் ரஜினிகாந்த், விகடன் குழும நிர்வாக இயக்குநர் சீனிவாசன், நடிகை ரோகிணி, நிகழ்ச்சி நெறியாளர் கோபிநாத், இயக்குநர் ஷங்கர், மாநில நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் மற்றும் வேள்பாரி வாசகர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

அந்த மயக்கத்திலிருந்து நாம் இன்னும் தெளியவே இல்லை!
நிகழ்ச்சியில் பேசிய ரோகிணி உரையாற்றும்போது, `` `வீரயுக நாயகன் வேள்பாரி' லட்சத்துக்கும் மேலான பிரதிகள் விற்றிருக்கின்றன என்பது மிகப்பெரிய சாதனை.
இந்தச் சாதனையையெல்லாம் தாண்டி எத்தனையோ வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இந்த நாவலில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களின் பெயர்களை வைத்திருக்கின்றனர்.
மேலும், இந்த நாவலுக்காக மணியம் செல்வன், பரம்பு நாட்டையே வரைந்ததைப் பார்த்திருக்கிறேன்.
தமிழ் வாசகச் சமூகம் பரம்பு மலையையும், அதனுடைய குடிகளையும் நேசித்தும், தாமே ஆதிகுடிகளாக மாறி சுவாசித்தும் பாரியைக் கொண்டாடியிருக்கிறார்கள்.
அதற்கு முக்கியக் காரணம் இதை நமக்கு அளித்த ஆனந்த விகடன் ஆசிரியர் பா.சீனிவாசன்.
ஈராயிரம் ஆண்டுக்கால கூட்டு நினைவுகளின் படைப்பு இந்த `வீரயுக நாயகன் வேள்பாரி’ என்று சு.வெங்கடேசன் கூறுகிறார். நீலன் கபிலருக்குத் தந்ததுபோல, நம்மையெல்லாம் மயக்கி, மூலிகையையும் நிரப்பித் தந்திருக்கிறார் ஆசிரியர்.
அந்த மயக்கத்திலிருந்து நாம் இன்னும் தெளியவே இல்லை. `வேள்பாரி’ வாசகர் கூட்டத்துக்கு நான் ஒரு முறை சென்றிருந்தபோதே, அங்கு வந்திருந்த வாசகர்கள் கொண்டுவந்திருந்த புத்தகங்கள், பேனா, மொழி என எல்லாவற்றிலும் `வேள்பாரி’ நிரம்பியிருந்தார்.
அப்படி அதிலிருந்து வெளி வராமலேயே தமிழ் வாசகர்கள் உலாவிக்கொண்டிருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
அதற்கு ஒளிபாய்ச்சிய மணியன் செல்வனுடைய தூரிகையும், மூலிகையில் நனைத்ததுதான் என்பதை உணர்கிறேன்.

ஒரு நாளாவது பரம்பு மலைக் காட்டுக்குள்..!
என்றென்றும் `வேள்பாரி’ உலகில் நாம் வசிக்க ஆசைப்படும் வண்ணங்களை அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார்.
`முதல்வன்’ திரைப்படத்தில் ஒரு நாள் முதல்வராவதுபோல், ஒரு நாளாவது பரம்பு மலைக் காட்டுக்குள் சென்று, ஒரு நாளாவது இருப்போமா என்று எல்லோரையும் ஏங்கவைத்திருக்கிறது தோழர் சு.வெங்கடேசனின் எழுத்து.
எதற்காக அந்த ஏக்கம் நமக்குள் ஏற்பட்டிருக்கிறது என்று யோசித்தால், ஆதிகுடிகளுடைய காடணைத்து வாழும் வாழ்வும், வேறுபாடற்ற வேதமற்ற வாழ்வு நிலைதான் நம்மை அப்படி நினைக்க வைத்திருக்கிறது. எப்போதுமே நாம் அப்படியான ஒரு வாழ்க்கைக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதுதான் இந்த `வேள்பாரி’யின் பரம்பு நாட்டை இன்னும் நாம் அப்படியே நம் மனதில் தூக்கிப்பிடித்து கொண்டாட வைக்கிறது.
உதிரன், இரவாதன்
`வேள்பாரி’யில் சில பெயர்கள் போக, மற்றவை ஆசிரியருடைய கற்பனை என்று அவரே சொல்லியிருக்கிறார். அந்தப் பெயர்களை குழந்தைகளுக்கு நிறைய பெற்றோர்கள் வைத்திருக்கிறார்கள்.
ஆனால் முக்கியமாக சு.வெங்கடேசன் இரண்டு பெயர்களை நம் முன் வைக்கிறார். உதிரன், இரவாதன் என இரண்டு பெயர்களும் கீழடி அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பெயர்கள்.
இந்தப் பெயர்கள் சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்னால் மண்ணால் செய்யப்பட்ட பொருளில் எழுதப்பட்ட பெயர்கள். இந்தப் பெயர்கள் இலக்கியத்தில் வேறு எங்கேயும் இல்லை.

இந்தக் காலகட்டத்தில் எங்கள் தோழர் செய்த மிக முக்கியமான பணி என்று இதை நான் சொல்கிறேன்.
`தேவாங்கு மட்டுமல்ல... பாரியும் அப்படித்தான்... என்ன விலை கொடுத்தாலும், சினம்கொண்டாலும், வீழ்ந்து பணிந்தாலும், திசை மாற மாட்டான்’ என்று பாரி குறித்து கபிலர் கூறுவார்.
நம் தமிழ்நாடும் அப்படித்தானே...`சமூக நீதி எனும் திசை மாற மாட்டோம்’ என உரக்கச் சொல்லும் தமிழ்நாடும் அப்படித்தான்’’ என்றார்.
வேள்பாரி Audio Formatல் கேட்க :
https://play.vikatan.com/Velpari-audio-book
வேள்பாரி புத்தகம் வாங்க இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்