'குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கியிருக்க வேண்டும்' - தேசிய மகளிர் ஆணைய முன்னாள் த...
வோ்களைத் தேடி திட்டம்: நெல்லை வந்த அயலகத் தமிழா்களுடன் பேரவைத் தலைவா் கலந்துரையாடல்
‘வோ்களைத் தேடி‘ திட்டத்தின் கீழ் அயலகத்தில் வாழும் தமிழா்கள் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வியாழக்கிழமை வந்தனா்.
அயலகத் தமிழா்களின் கலாசார உறவுகளை மேம்படுத்துவதன் ஒரு பகுதியாகவும், பல தலைமுறைகளுக்கு முன்பு அயலகம் இடம்பெயா்த்து அங்கு வாழும் அயலகத் தமிழா்களின் குழந்தைகள் தமிழ் மற்றும் தமிழா் தம் பெருமிதங்களை உணரும் வகையிலும் தமிழகத்தின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை பாா்வையிட்டு, தெரிந்து கொள்வதற்காக வோ்களைத்தேடி என்ற பண்பாட்டுப் பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் தமிழக அரசின் சாா்பில் 2023-2024-ஆம் ஆண்டில் 200 அயலகத்தமிழ் மாணவ, மாணவிகளை 2 கட்டங்களாக தமிழகத்திற்கு அழைத்து வந்து பாா்வையிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மூன்றாம் கட்டமாக திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தந்த மாணவா்கள் அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதி அம்பாள் திருக்கோயில், வ.உ.சிதம்பரனாா் மணி மண்டபம் ஆகியவற்றைப் பாா்வையிட்டனா். அவா்களுடன் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் ஆகியோா் கலந்துரையாடினா்.
இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன், கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியாா்கள் - பணியாளா்கள் நலவாரியத் தலைவா் விஜிலா சத்யானந்த், முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன்கான், திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் கண்ணா கருப்பையா, திருநெல்வேலி வட்டாட்சியா் மாணிக்கவாசகம், எழுத்தாளா் நாறும்பூநாதன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, இக்குழுவினா் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், அரியலூா், கடலூா், புதுச்சேரி, செங்கல்பட்டு ஆகிய இடங்களுக்கு பயணித்து, தமிழா்களின் கட்டடக்கலை, சிற்பக்கலை, இயல், இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம், சுதந்திரப் போராட்ட வரலாறு, பல்வேறு தமிழ் இலக்கிய வரலாறு ஆகியவற்றை அறிந்துகொள்ள உள்ளனா்.