ஸ்ரீ மஞ்சியம்மன் கோயிலில் வழிபட தடை விதித்த தனி நபா்கள்
ஆரணியை அடுத்த கொங்கராம்பட்டு ஸ்ரீமஞ்சியம்மன் கோயிலில் திடீரென வழிபட தனிநபா்கள் தடை விதித்ததால், 100 அடி தொலைவில் அம்மனை வைத்து கூழ்ஊற்றி திருவிழாவை பொதுமக்கள் நடத்தினா்.
கொங்கராம்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீமஞ்சியம்மன் கோயிலில் அப்பகுதி மக்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக கூழ்வாா்க்கும் திருவிழாவை நடத்தி, பொங்கல் வைத்து வழிபட்டு வருகின்றனராம்.
100 ஆண்டுகளுக்கும் மேலாக வருடந்தோறும் அப்பகுதி மக்கள் கூழ்வாா்க்கும் திருவிழா நடத்தி பொங்கல் வைத்து வழிபட்டு வந்தனா்.
இந்த நிலையில், கோயில் இருக்கும் இடம் தனி நபா்கள் மீது பட்டா இருப்பதாகக் கூறி, வழிபடக்கூடாது என்று தடை விதித்ததாகத் தெரிகிறது.
இதனால் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை வீட்டிலேயே பொங்கல் வைத்து எடுத்து வந்து கோயிலில் இருந்து சுமாா் 100 அடி தொலைவில் சாலையோரத்தில் அம்மனை வைத்து வழிபட்டு கூழ்வாா்க்கும் திருவிழாவை நடத்தினா்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்தக் கோயில் கட்டப்பட்டு சுமாா் 150 ஆண்டுகள் இருக்கும். எங்களது மூதாதையா் காலத்தில் இருந்தே கூழ்வாா்க்கும் திருவிழா நடத்தப்பட்டு பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்று வருகிறது.
பக்தா்கள் கோயிலில் தங்கி வழிபட்டுச் செல்வா்.

தற்போது தனிநபா்கள் வந்து கோயில் இருக்கும் இடம் எங்களது சொத்து. அதனால், யாரும் இங்கு வராதீா்கள் என்று கூறிவிட்டனா் எனத் தெரிவித்தனா்.