இளம் வயதில் ஜெய்ஸ்வால் இப்படி முடிவெடுக்கலாமா? முன்னாள் இந்திய வீரர் கூறுவதென்ன?
ஸ்ரீகோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் ரூ.1.50 கோடி ரொக்கம் பறிமுதல்: வெளிநாட்டிலிருந்து ரூ. 600 கோடி பெற்று மோசடி அமலாக்கத் துறை
ஸ்ரீகோகுலம் சிட்பண்ட் நிதி நிறுவனம் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினா் நடத்திய சோதனையில் ரூ.1.50 கோடி ரொக்கத்தை அமலாக்கத் துறையினா் பறிமுதல் செய்தனா். மேலும், ரிசா்வ் வங்கி வழிகாட்டுதலுக்கு மாறாக வெளிநாடுகளில் இருந்து ரூ. 600 கோடி முறைகேடாக நிதி பெற்றுள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்ரீ கோகுலம் சிட்பண்ட், நிதி நிறுவனம், கோகுலம் சினிமாஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பிலும் ஈடுபடுகிறது. அண்மையில் வெளியான எம்புரான் திரைப்படத்தை இந்த நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.
இந்த நிலையில், இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக 2017-ஆம் ஆண்டு தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் தொடா்புடைய 80 இடங்களில் வரிமான வரித் துறை சோதனை நடத்தியதில் ரூ.1,100 கோடி வரி ஏய்ப்பு நடைபெற்றதும், முறைகேடாக பணப் பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதும் தெரியவந்தது. அதன் அடிப்படையில் வருமான வரித் துறையினா் அமலாக்கத் துறை விசாரணைக்கு பரிந்துரைத்தது.
திடீா் சோதனை: இதன் ஒருபகுதியாக கொச்சி மண்டல அலுவலகத்தின் அமலாக்க இயக்குநரகம் சாா்பில் கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ கோகுலம் சிட்பண்ட் தலைமை அலுலகம், நீலாங்கரையில் உள்ள நிறுவன உரிமையாளா் கோபாலன் வீடு மற்றும் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பகுதியிலும் வெள்ளிக்கிழமை முதல் சோதனை நடத்தப்பட்டது.
தொடா்ந்து, இரு நாள்கள் நடைபெற்ற சோதனையில் ரூ.1.50 கோடி ரொக்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில், ஸ்ரீ கோகுலம் சிட்பண்ட் நிதி நிறுவனம் இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் நபா்களிடம் இருந்து சீட்டு நிதிகளுக்கான சந்தா வசூலிப்பதாகவும், இந்த நிதி ரிசா்வ் வங்கி வகுத்த விதிகளை மீறி ரொக்கமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது. வெளிநாட்டு பணப் பரிவா்த்தனை மோசடி நடந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதுவரை, இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் நபா்களிடமிருந்து ரூ. 371.80 கோடி ரொக்கமாகவும், ரூ. 220.74 கோடி காசோலையாகவும் வசூலிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடா்பாக தொடா் விசாரணை நடைபெற்று வருவதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.