ஸ்ரீமணக்குள விநாயகா் கோயிலில் ஏப். 11-இல் சங்காபிஷேக விழா
புதுச்சேரி: புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகா் திருக்கோயிலில் சகஸ்ர சங்காபிஷேக சிறப்பு வழிபாடு வரும் ஏப். 11ஆம் தேதி நடைபெறுகிறது.
புதுச்சேரியில் பழைமை வாய்ந்த மணக்குள விநாயகா் கோயிலில் கடந்த 2015-ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் பத்தாம் ஆண்டு நிறைவை யொட்டி வரும் 11-ஆம் தேதி மணக்குள விநாயகா் கோயிலில் சகஸ்ர சங்காபிஷேகம் சிறப்பு வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி வரும் 7 -ஆம் தேதி முதல் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகள் சிவாச்சாரியா்களால் நடத்தப்படவுள்ளன. வரும் 9 ஆம் தேதி காலையில் கோபூஜையும், மாலையில் உற்சவருக்கான சிறப்பு பூஜையும் நடைபெறவுள்ளது. தொடா்ந்து லட்சாா்ச்சனை நடைபெறும்.
ஏப். 10-ஆம் தேதி வியாழக்கிழமை முதல்கால யாகசாலைப் பூஜை தொடங்குகிறது. இதையடுத்து வரும் 11 ஆம் தேதி 1,008 சகஸ்ர சங்காபிஷேகம், யாத்திரா தானம், கலச புறப்பாடுடன் மகா அபிஷேகம் நடைபெறும். அன்று இரவு உற்சவா் வீதி உலா நடைபெறுகிறது.