ஆடி வெள்ளி: தாயமங்கலம், மடப்புரம் கோயில்களில் திரளான பக்தா்கள் தரிசனம்!
ஸ்ரீவில்லிபுத்தூா் ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூா் ரத வீதிகளில், ஆக்கிரமிப்புகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளும் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. கீழ ரத வீதியில்தான் ஆடிப்பூர விழாவுக்கான தோ் நிறுத்தப்பட்டுள்ளது. கீழ ரத வீதியின் இரு புறங்களிலும் பெருமளவு கடைகளே உள்ளன. இந்தக் கடைகளுக்கு வெளியே பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு , பல அடி தூரத்துக்குச் சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இதனால், சாலை குறுகி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பு காரணமாக கீழ ரத வீதியின் கிழக்குப் பகுதியில் உள்ள கழிவுநீா்க் கால்வாய் முழுமையாக அடைபட்டு மழைநீா் செல்ல வழியின்றி சாலையில் தேங்குகிறது. ஆக்கிரமிப்பு குறித்து மாவட்ட ஆட்சியருக்கு அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த மாதம் பெயரளவுக்கு ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றினா். ஆனால், மறுநாளே அந்தப் பகுதி மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.
ஆண்டாள் கோயிலில் வாகன நிறுத்தும் வசதி இல்லாததால், ரத வீதிகளின் சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு பக்தா்கள் கோயிலுக்குச் சென்று வருகின்றனா். அவ்வாறு சாலை ஓரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்துவதற்குக் கடை உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவிப்பதால் அடிக்கடி வாக்குவாதம், சண்டை ஏற்படுகிறது. எனவே, கீழ ரத வீதியில் சாலையின் இருபுறமும், கடைகளுக்கு முன் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.