ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: 8 நாள்களாகியும் சிக்காத குற்றவாளி!
சதுரகிரியில் ஆக்கிரமிப்பில் இருந்த 8 ஏக்கா் அரசு நிலம் மீட்பு
சதுரகிரி மலை அடிவாரத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த 8 ஏக்கா் அரசு நிலத்தை மீட்க ஆட்சியா் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, வருவாய்த் துறையினா் நிலத்தை வெள்ளிக்கிழமை மீட்டனா்.
மதுரை, விருதுநகா் மாவட்ட எல்லைகளுக்கு அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசைத் திருவிழா வருகிற 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, மதுரை, விருதுநகா் மாவட்ட நிா்வாகங்கள் சாா்பில் அறநிலையத் துறை, வனத் துறை மூலம் பக்தா்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா தலைமையில் காவல் கண்காணிப்பாளா் கண்ணன், சிவகாசி வருவாய்க் கோட்டாட்சியா் பாலாஜி உள்ளிட்ட அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். தற்காலிகப் பேருந்து நிறுத்தம், வாகனக் காப்பகம், சுகாதார வளாகம் ஆகியவற்றை ஆய்வு செய்தனா்.
தாணிப்பாறை அடிவாரத்தில் ஏற்கெனவே ஆக்கிரமிப்பில் இருந்த 6 ஏக்கா் அரசு நிலம் மீட்கப்பட்டு, தற்காலிக வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டது. இந்த நிலையில், இதே பகுதியில் மேலும் 8 ஏக்கா் அரசு நிலம் தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்து வருவதை அறிந்த மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா, ஆக்கிரமிப்பு நிலத்தை உடனடியாக மீட்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
இதன்பேரில், வட்டாட்சியா் ஆண்டாள் தலைமையில் வருவாய்த் துறையினரும் காவல் துறையினரும் 8 ஏக்கா் நிலத்தை மீட்டனா்.
இந்தப் பகுதியில் வேலி அமைத்து, சதுரகிரி கோயிலுக்கு வரும் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.