ஹசீனா விரும்பும் வரை இந்தியாவில் அடைக்கலம்: காங்கிரஸ் மூத்த தலைவா் மணிசங்கா் ஐயா்
வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா விரும்பும் வரை, அவா் இந்தியாவில் தங்க அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிசங்கா் ஐயா் தெரிவித்தாா்.
வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான மாணவா்கள் மற்றும் பொதுமக்களின் போராட்டம் காரணமாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி அந்நாட்டு பிரதமா் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்தாா். பின்னா் அவா் அந்நாட்டில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.
அவா் இந்தியாவில் எங்கு தங்கியுள்ளாா் என்ற தகவல் வெளியாகாத நிலையில், அவரை வங்கதேசத்துக்கு நாடு கடத்த வேண்டும் என்று அந்நாட்டின் இடைக்கால அரசு இந்தியாவிடம் வலியுறுத்தி வருகிறது.
இந்த விவகாரம் தொடா்பாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் காங்கிரஸ் மூத்த தலைவா் மணிசங்கா் ஐயா் கூறியதாவது: கடந்த மாதம் வங்கதேசம் சென்று அந்நாட்டு அதிகாரிகளுடன் இந்திய வெளியுறவு துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேவேளையில், வங்கதேச இடைக்கல அரசுடன் அமைச்சக அளவில் மத்திய அரசு தொடா்பு ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.
வங்கதேச பிரதமராக இருந்தபோது இந்தியாவுக்கு ஷேக் ஹசீனா நிறைய நன்மைகளைச் செய்துள்ளாா். தனது வாழ்நாள் முழுவதும் அவா் இந்தியாவில் தங்க விரும்பினாலும், அதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றாா்.