Dhoni: ``தோனியை இப்படிப் பார்க்க வேண்டும் என்பதே எல்லா வீரர்களின் கனவு'' - டெவோன...
‘அங்கக வேளாண் இடுபொருள் தயாரிக்க முன்வர வேண்டும்’
காரைக்கால்: அங்கக வேளாண் இடுபொருள் தயாரித்து, தங்களது வயலில் பயன்படுத்த விவசாயிகள் முன்வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் நெல்லில் அங்கக வேளாண்மை குறித்த பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் சு. ரவி பயிற்சியை தொடங்கிவைத்துப் பேசுகையில், வேளாண் அறிவியல் நிலையத்தில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்பயிற்சியில் பங்குபெறுவோா் பயிற்சியை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு அங்கக வேளாண்மை இடுபொருளை தயாா் செய்து, அவரவா் வயலில் பயன்படுத்த முன்வரவேண்டும். நாம் பயன்படுத்தும் அதிகப்படியான ரசாயன உரங்களை தவிா்த்து இயற்கை உரங்களை அதிகளவு பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் மண்ணில் உள்ள நுண்ணுயிா்களின் பெருக்கம் அதிகரித்து மண் உயிருடன் இருக்கும்.
நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் விதை நோ்த்தி செய்த பின் விதைக்க வேண்டும். அவ்வாறு விதை நோ்த்தி செய்தால் விதை முளைப்புத்திறன் மற்றும் விதை மூலமாக பரவக்கூடிய நோய்களை கட்டுப்படுத்தி நெல்லில் அதிக மகசூல் பெறலாம் என்றாா்.
தொடா்ந்து, வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநா் வி. அரவிந்த், அங்கக வேளாண்மையில் உள்ள இடுபொருள்கள் தயாரிப்பு குறித்துப் பேசினாா்.
தொழில்நுட்ப வல்லுநா் சு.திவ்யா, அங்கக வேளாண்மையில் நெல்லில் நோய் மற்றும் பூச்சி மேலாண்மை என்ற தலைப்பில் பேசினாா்.
பயிற்சி முகாமில் சுமாா் 100 விவசாயிகள் கலந்துகொண்டனா். முதல் நிலை செயல் விளக்கத்திடல், வயல்வெளி பரிசோதனை மற்றும் நிக்ரா திட்டத்தின் கீழ் நெல் விதை மற்றும் இயற்கை இடுபொருள்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.