ஒருமுறை சார்ஜுக்கு 142 கி.மீ. பயணம்! ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்!
அஜித்குமார் கொலை வழக்கு! சீமான் சரமாரி கேள்விகள்!
மடப்புரம் அஜித்குமாரின் கொலை வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்தினரைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவியும் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுடன் சீமான் பேசுகையில், அஜித்குமார் மீது புகாரளித்த நிகிதா மீது பல்வேறு மோசடி புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளில் அவர் கைது செய்யப்படவோ விசாரிக்கப்படவோ இல்லை.
இதன் மூலம், நிகிதாவின் மோசடிப் பணத்தில் பங்களிக்கப்பட்டதா என்ற சந்தேகமும் எழுகிறது. இப்போதும்கூட அவரை விசாரிக்காதது ஏன்?
உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கைது செய்யப்பட்ட போலீஸாரின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். அவர்கள் குறிப்பிடும் உயர் அதிகாரிகள் யார்? என்ற விசாரணையும் இல்லை.
மனித உரிமையை மீறி விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தது யார்? போராட்டத்துக்கு நெறிமுறைகள் பேசும் போலீஸார், அவர்களும் அதனைக் கடைபிடித்திருந்தால் அஜித்குமார் இறந்திருக்க மாட்டார்.
சிபிஐ விசாரணையை முதல்வர் கோருகிறார். ஆனால், யார் கட்டுப்பாட்டின்கீழ் காவல்துறை செயல்படுகிறது? யாரின் துறை அது? உங்கள் போலீஸார் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?
எப்படி நடந்தது என தெரியாமல் இருந்தால்தான் விசாரணை வேண்டும். ஆனால், குற்றம் வெளிப்படையாகத் தெரிகிறது. உத்தரவு பிறப்பித்தவர்கள் மீதுதான் நடவடிக்கை வேண்டும். இதில் விசாரணை மேற்கொள்ள அவசியமென்ன?
ஏமாற்றுவதற்காகத்தான் வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்படுகிறது. சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட எத்தனை வழக்குகளில் நீதி வழங்கப்பட்டுள்ளது? சிபிசிஐடி-யிலிருந்து விசாரணையை சிபிஐ-க்கு மாற்றியதே ஏமாற்றத்தான்.
கள்ளச்சாராயம் குடித்து பலியானால் ரூ.10 லட்சம் வழங்கும் அரசு, போலீஸாரால் அடித்து படுகொலை செய்யப்படுபவர்களுக்கு ரூ.5 லட்சம் மட்டும் கொடுத்து, நிதி இல்லை எனக் கூறுவது நியாயமா?
அஜித்குமாரை அடித்துக் கொல்லும் அளவுக்கு நெருக்கடி அளித்த அந்த உயர் அதிகாரி யார்? அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் பேரம் பேசியதன் மூலம் யார் குற்றவாளி என்பது தெரியவில்லையா?
இந்தக் கேள்விகளை எதிர்க்கட்சிகள் கேட்கிறதா? தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு உத்தரவு பிறப்பித்தது யார்? கோடநாட்டில் இறந்தவர் யார் என்பது தெரிகிறது; கொன்றது யார்? என்று கேள்வி எழுப்பினார்.