"படிப்பு சரியாக வரவில்லை" - சாணி பவுடரைச் சாப்பிட்டு தனியார்ப் பள்ளி மாணவர் தற்கொலை; நடந்தது என்ன?
கரூர் மாவட்டம், ஈசநத்தம் கஸ்பா தெருவைச் சேர்ந்தவர் லிங்கேஸ்வரன். இவரது மகன் யுவன் பிரியன் (வயது 17). இவர், அரவக்குறிச்சி அருகே உள்ள தனியார்ப் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் தனது தாய் ராதாவுடன் அரவக்குறிச்சி, காமராஜ் நகரில் தங்கிப் படித்து வருகிறார். மாணவன் தினசரி பள்ளி முடிந்த பிறகு சீத்தப்பட்டி காலனியில் செயல்படும் டியூசன் சென்டரில் டியூசன் முடித்துவிட்டு, இரவு வீட்டுக்குத் திரும்புவது வழக்கம்.
இந்நிலையில், இரவு வழக்கம் போல பள்ளி முடிந்து, டியூஷன் சென்டர் போய்விட்டு 8 மணி அளவில் சீத்தப்பட்டிகாலனி பேருந்து நிறுத்தத்தில் வந்து சாணி பவுடர் (விஷம்) சாப்பிட்டதாகத் தெரிகிறது.
பின்னர், மாணவன் வீடு திரும்பியவுடன் தனக்குக் கணக்கு பாடம் சரியாக வராததால்தான் சாணி பவுடரைச் சாப்பிட்டதாக தாய் ராதாவிடம் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராதா, உடனடியாக தனது மகனை அழைத்துக் கொண்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
அங்குத் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவன் உயிரிழந்தது தொடர்பாக, அரவக்குறிச்சி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.