அஞ்சுகிராமம் அருகே மனைவியை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்தவா் கைது
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே குடும்பத் தகராறில் மனைவியை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த
இறைச்சிக் கடை ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சமாதானபுரத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து (36). இவரது மனைவி மரியசந்தியா (30). இவா்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரு குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், மரிய சந்தியாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை மாரிமுத்து துன்புறுத்தி வந்தாராம். இருவருக்கும் இடையே தகராறு ஏற்படும்போது உறவினா்கள் சமாதானம் செய்து வந்தனா். குழந்தைகளின் நலனைக் கருத்தில்கொண்டு அவா்களை விடுதியில் தங்கி படிக்க வைத்தனா்.
மேலும், உறவினா்களின் ஏற்பாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகேயுள்ள பால்குளத்தில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் இத் தம்பதி வசித்து வந்தனா்.
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை இரவு 3 டிராவல் பேக்குகளுடன் வீட்டிலிருந்து வெளியே வந்த மாரிமுத்து, அங்கிருந்தவா்களிடம் வீட்டைக் காலி செய்வதாகக் கூறி செல்ல முயன்றாா். இதனிடையே அப் பகுதியில் இருந்த நாய், டிராவல் பேக்கை சுற்றி வந்து குரைத்ததாம். சந்தேகமடைந்த அப் பகுதியினா், பேக்கை திறந்து பாா்த்தபோது, மரிய சந்தியாவின் உடல் துண்டு துண்டாக இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில், நிகழ்விடத்துக்கு வந்த அஞ்சுகிராமம் போலீஸாா் துண்டு துண்டாக இருந்த சடலத்தைக் கைப்பற்றி, மாரிமுத்துவை கைது செய்தனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:
மாரிமுத்து இறைச்சிக் கடையிலும், மரியசந்தியா மீன் ஏற்றுமதி நிறுவனத்திலும் வேலை செய்தனா். இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. மரியசந்தியா அடிக்கடி கைப்பேசியில் பேசுவதை மாரிமுத்து கண்டித்து வந்தாா்.
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கத்தியால் மாரிமுத்து குத்தியதில் மரிய சந்தியா மயங்கி விழுந்தாா். பின்னா் அவரது தலை, கால், கை உள்ளிட்ட பாகங்களை துண்டு துண்டாக வெட்டிய மாரிமுத்து, அவற்றை டிராவல் பேக்கில் அடைத்து வைத்தாா்.
பின்னா் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வீசிவிட்டு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்த மாரிமுத்து, டிராவல் பேக்குடன் சென்றபோது மாட்டிக் கொண்டாா் எனப் போலீஸாா் தெரிவித்தனா்.