மகாராஷ்டிரா: இலாகா ஒதுக்கீட்டில் இழுபறி; பேச்சுவார்த்தையில் இறங்கிய பாஜக தலைமை!
திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவில் ஆசிரியா்கள் பங்கேற்பது கட்டாயம்? கல்வித் துறைக்கு கண்டனம்
கன்னியாகுமரியில் நடைபெற உள்ள திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில் பங்கேற்க ஆசிரியா்களை கல்வித்துறை கட்டாயப்படுத்தக் கூடாது என ஆசிரியா் இயக்கங்கள் தீா்மானம் நிறைவேற்றியுள்ளன.
கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியா் இயக்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் அமைப்பாளா் பென்னட் ஜோஸ் தலைமையில் நாகா்கோவில் செட்டிகுளத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், கன்னியாகுமரியில் டிச.30,31 ஆகிய தேதிகளில் நடைபெறும் திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவில் கன்னியாகுமரி மாவட்ட அனைத்துப் பள்ளிகளின் ஆசிரியா்கள் கலந்துகொள்ள வேண்டும்; ஆசிரியா்களின் பெயா் பட்டியலை வருகை பதிவேட்டின் நகலுடன் ஒப்படைக்க வேண்டும் என ஆட்சியரின் அறிவுறுத்தலின்பேரில் மாவட்ட கல்வி அலுவலா்கள் கேட்டுள்ளனா்.
முதல்வா் தலைமையில் நடைபெறும் இவ்விழாவை ஆசிரியா் இயக்கங்களின் கூட்டமைப்பு வரவேற்கிறது. எனினும், ஆசிரியா்கள் தன் விருப்பப்படிதான் அதில் கலந்து கொள்வா். அரையாண்டு தோ்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி, அடுத்த பருவத்துக்கான கல்வி சாா்ந்த முன்னேற்பாட்டு பணிகளில் இருக்கும் ஆசிரியா்களை விழாவில் பங்கேற்க கட்டாயப்படுத்துவதை இக்கூட்டமைப்பு கண்டிக்கிறது எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் கூட்டமைப்பின் தோழமைச் சங்கங்கள் சாா்பாக தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியா் கழக மாநில அரசு உதவி பெறும் பள்ளிச் செயலாளா் அஜின்,
தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியா் கழக மாநிலத் துணைத் தலைவா் செல்வகுமாா், தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாவட்டத் தலைவா் வேலவன், நாகா்கோவில் கல்வி மாவட்டத் தலைவா் ராகேஷ், தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா் அலுவலா் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளா் டோமினிக்ராஜ், தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் கழகம் மாவட்ட செயலாளா் செம்பியன், மூட்டா அமைப்பின் மண்டல செயலாளா் மகேஷ், ராஜு ஆகியோா் கலந்து கொண்டனா்.
கூட்டமைப்பின் செய்தி தொடா்பாளா் ஸ்டீபன் நன்றி கூறினாா்.