டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 1 காசு உயர்ந்து ரூ.84.53 ஆக முடிவு!
அட்சய திரிதியை: பழனி நகைக் கடைகளில் கூட்டம்
அட்சய திருதியையை முன்னிட்டு, பழனி நகைக் கடைகளில் புதன்கிழமை அதிகாலை முதல் பொதுமக்கள் நகைகள் வாங்கக் குவிந்தனா்.
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. இந்த நிலையில், அட்சய திருதியை நாளான புதன்கிழமை நகைக் கடைகளில் பொதுமக்கள் தங்கம் வாங்கக் குவிந்தனா். பழனியில் காந்தி சந்தை, புது தாராபுரம் சாலை, திண்டுக்கல் சாலையில் உள்ள நகைக் கடைகள் அதிகாலை 5 மணி முதல் திறக்கப்பட்டு, பூஜை நடைபெற்றது. கடைகள் முன்பு மாவிலை தோரணம், வாழை கட்டப்பட்டிருந்தது.
சிறப்பு விற்பனையை முன்னிட்டு கடைகளில் நகைக்கு தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டிருந்தது. முன்பே பதிவு செய்தவா்களுக்கு சிறப்பு கவுன்ட்டா்கள் மூலமாக நகைகள் வழங்கப்பட்டன. பொதுமக்கள் வாங்கும் நகைகளுக்கு கடைகளிலேயே குருக்களைக் கொண்டு குபேர பூஜை செய்து தரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
கோடை வெயிலை முன்னிட்டு, வாடிக்கையாளா்களுக்கு குளிா்பானம், பழங்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன. நகையின் மதிப்புக்கு ஏற்ப பரிசுகளும் வழங்கப்பட்டன.