அண்ணா, எம்ஜிஆர், கேப்டன்.. தவெக மாநாட்டில் குறிப்பிடப்பட்ட திராவிடத் தலைவர்கள்!
தமிழக வெற்றிக் கழகத்தின், 2-வது மாநில மாநாட்டில் தமிழகத்தின் முக்கிய திராவிட கட்சிகளின் தலைவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு வருகின்றது.
மதுரையில் நடைபெறும் தவெக-வின், 2-வது மாநில மாநாட்டில் இசையமைப்பாளர் இசையில் உருவான சிறப்புப் பாடல் வெளியிடப்பட்டது. இந்தப் பாடலை தவெக தலைவர் விஜய் பாடியிருந்தார்.
இந்தப் பாடலில், விஜயை பெரியாரின் பேரன் எனக் கூறும் வரிகள் இடம்பெற்றிருந்தன. மேலும், பெரியாரை தவெக-வின் கொள்கைத் தலைவர்களுள் ஒருவராக அக்கட்சி அறிவித்திருந்தது.
இந்நிலையில், முன்னாள் தமிழக முதல்வர் அண்ணா துரை தலைமையில் கடந்த 1967 ஆம் புதியதாக அமைந்த திமுக ஆட்சி மற்றும் 1977 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தலைமையில் புதியதாக அமைந்த அதிமுக ஆட்சியைப் போலவே 2026-ல் விஜய்யின் தலைமையிலான தவெக ஆட்சி தமிழ்நாட்டில் அமையும் எனத் தொடர்ந்து இம்மாநாட்டில் அக்கட்சியின் நிர்வாகிகள் குறிப்பிட்டு வருகின்றனர்.
இத்துடன், தற்போது தனது உரையைத் தொடங்கிய தவெக தலைவர் விஜய், “எம்.ஜி.ஆருடன் பழகுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அவரைப் போன்றே குணம்கொண்ட எனது அண்ணன் கேப்டன் விஜயகாந்துடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது” என மறைந்த தேமுதிக தலைவரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தேமுதிக தலைவர் விஜய்காந்தின் பெயரை தங்களது அனுமதியின்றி எந்தவொரு அரசியல் கட்சியும் பயன்படுத்தக்கூடாது என அவரது மனைவியும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான பிரேமலதா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சிங்கம் வேட்டைக்கு மட்டுமே வெளியே வரும்: விஜய்