"பிரதமர் MODI அவர்களே... STALIN அங்கிள்" | TVK Madurai மாநாட்டில் Vijay-ன் Fiery...
சென்னை: தோழிக்காக சிறைக்குச் சென்ற ஆண் நண்பர் - ஊழியருக்கு ஆபாச பதிவு அனுப்பிய பின்னணி!
சென்னை மதுரவாயல் சிவந்தி ஆதித்தனார் தெருவில் வசித்து வரும் பிரபு (41). இவர், சென்னை, அரும்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த அலுவலகத்தின் பெயரில் போலியாக ஒரு இன்ஸ்டாகிராம் ஐடி தொடங்கப்பட்டு அதிலிருந்து பிரபுவுக்கும், அவருடன் வேலை பார்க்கும் பெண்கள் உட்பட சிலருக்கு ஆபாசமான மெசேஜ்கள் அனுப்பப்பட்டு வந்தன. அதனால் பிரபு உள்ளிட்டோர் அதிர்ச்சியடைந்தனர். இந்தச் சூழலில் ஆபாசமான பதிவுகளை நீக்க வேண்டும் என்றால் 10 லட்சம் ரூபாயை கிரிப்போ வாலட்டில் முதலீடு செய்ய வேண்டும் எனவும் அந்த ஐடியிலிருந்து மெசேஜ் அனுப்பப்பட்டது. இதையடுத்து போலி ஐடி மூலம் ஆபாச பதிவுகளை அனுப்பியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரபு, சென்னை பெருநகர காவல், மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் (IT Act) ஆகிய பிரிவுகளில் சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் போலி இன்ஸ்டாகிராம் ஐடி உருவாக்கி புகார்தாரரையும் மற்ற ஊழியர்களையும் ஆபாச செய்திகள் பதிவிட்டு பணம் கேட்டு மிரட்டியது மதுரவாயல், எம்.எம்.டி.ஏ காலனியைச் சேர்ந்த வெங்கடேஷ், (25) எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து குற்றச் செயலுக்குப் பயன்படுத்தி ஐபோனையும் பறிமுதல் செய்தனர். வெங்கடேஷிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், இவரின் தோழி ஒருவர், அரும்பாக்கம் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேருவதற்காக 3 லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்தியிருக்கிறார். ஆனால் தோழிக்கு வேலையும் கொடுக்காமல், முன்பணத்தையும் திரும்ப தராமல் அங்கு வேலைப்பார்த்து வரும் பிரபு உள்பட சில ஊழியர்கள் அலைக்கழித்ததோடு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறார்கள். பின்னர் முன்பணம் 3 லட்சம் ரூபாயை நீண்ட நெடிய போராட்டத்துக்குப்பிறகு வெங்கடேஷின் தோழி திரும்ப பெற்றியிருக்கிறார். இந்தத் தகவலை வெங்கடேஷிடம் அவரின் தோழி கூறியிருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தன்னுடைய தோழிக்காக பிரபு உள்ளிட்டோருக்கு போலி இன்ஸ்டாகிராம் ஜடி மூலம் ஆபாச பதிவுகளை தொடர்ந்து அனுப்பி பழிவாங்கி வந்திருப்பது தெரியவந்தது.