அதானிக்கு நேரடியாக நோட்டீஸ்: அமெரிக்க பங்குச்சந்தை ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை
மோசடி குற்றச்சாட்டில் தொழிலதிபா் கெளதம் அதானிக்கும் அவரது உறவினா் சாகா் அதானிக்கும் அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையம் (எஸ்இசி) நேரடியாக நோட்டீஸ் அனுப்ப சட்டபூா்வ அதிகாரமில்லை; முறையான தூதரக வழியிலேயே அவா்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடியும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியாவில் கெளதம் அதானிக்குத் தொடா்புடைய நிறுவனங்கள் விநியோகிக்கும் சூரிய மின்சக்தியை வாங்க பல்வேறு மாநில மின் விநியோக நிறுவன அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.2,239 கோடி) லஞ்சம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இத்திட்டங்களுக்கு அமெரிக்க வங்கிகள் மற்றும் முதலீட்டாளா்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை அதானி குழுமம் திரட்டியுள்ளது. அந்த வங்கிகள் மற்றும் முதலீட்டாளா்களை மோசடிக்குள்ளாக்கி அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டது மறைக்கப்பட்டதாக அமெரிக்க நீதித் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இதேபோல பங்குகள் மோசடி, தகவல் தொடா்பு மோசடி உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு, அமெரிக்க பங்கு முதலீட்டாளா்கள் பாதுகாப்பு சட்ட விதிகளை மீறியதாக கௌதம் அதானி, அவரது உறவினா் சாகா் அதானி மீது அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையமும் குற்றஞ்சாட்டியுள்ளது.
இக்குற்றச்சாட்டுகளில் தங்களின் நிலைப்பாட்டை விளக்குமாறு அதானி தரப்புக்கு எஸ்இசி நோட்டீஸ் பிறப்பித்தது. ஆனால், எஸ்இசி-க்கு வெளிநாட்டு குடிமக்கள் மீது எந்த சட்டபூா்வ அதிகாரமும் இல்லை. வெளிநாட்டவா்களிடம் நேரடியாக விளக்கம் கேட்டுப் பெற அந்த அமைப்பால் முடியாது. எனவே, நோட்டீஸுக்கு விளக்கம் பெறும் கோரிக்கையானது அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் மற்றும் பிற ராஜீய நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெற வேண்டும்.
1965-ஆம் ஆண்டு ஹேக் உடன்படிக்கை மற்றும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம் ஆகியவை இத்தகைய விஷயங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளை தெளிவாக விளக்குகின்றன.
இதன்மூலம், நியூயாா்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக எஸ்இசி தாக்கல் செய்த நோட்டீஸ், உண்மையில் அதானி தரப்புக்கு வழங்கப்படுவதற்கு தாமதமாகும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு அதானி குழுமம் ஏற்கெனவே மறுப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.