அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்துக்கு புதிய திட்டங்கள்: முதல்வர் அறிவிப்பு!
அதானி வீட்டில்தான் அதிகாரப் பகிர்வு பேச்சு நடந்தது! சரத் பவார்
பாரதிய ஜனதா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் கூட்டம் அதானி வீட்டில்தான் நடந்தது என்று தேசியவாத காங்கிரஸ்(பவார் அணி) தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மேலும், தில்லியில் உள்ள அதானி வீட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, அஜித் பவார் மற்றும் கெளதம் அதானியுடன் நானும் பங்கேற்றேன் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிக்க : பாஜக - தேசியவாத காங். கூட்டணிப் பேச்சில் பங்கேற்ற அதானி! அஜித் பவார் அதிர்ச்சி தகவல்
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 20ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஆங்கில ஊடகமான ‘தி நியூஸ் மினிட்’டுக்கு பாஜக கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் நேர்க்காணல் ஒன்றை அளித்திருந்தார்.
அதில், கடந்த 2019ஆம் ஆண்டு பாஜக - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தபோது, தில்லியில் உள்ள தொழிலதிபர் வீட்டில் நடந்த கூட்டத்தில் அமித் ஷா, சரத் பவார் மற்றும் கெளதம் அதானி பங்கேற்றதாக தெரிவித்தார்.
மகாராஷ்டிர அரசியலில் கெளதம் அதானியின் தலையீட்டுக்கு பல்வேறு தரப்பினர் அதிருப்தி தெரிவித்த நிலையில், இந்த சந்திப்பு குறித்து ‘தி நியூஸ் மினிட்’டுக்கு சரத் பவார் விளக்கம் அளித்துள்ளார்.
தில்லியில் உள்ள அதானி வீட்டில், கடந்த 2019-ல் தேவேந்திர பட்னவீஸ் மற்றும் அஜித் பவார் பதவியேற்பு நிகழ்வுக்கு முந்தைய நாள் இரவு இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவித்தார்.
கெளதம் அதானி ஏற்பாடு செய்திருந்த இந்த விருந்தில், அமித் ஷா, அஜித் பவார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ஆனால், அரசியல் சார்ந்த கலந்துரையாடலில் கெளதம் அதானி பங்கேற்கவில்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.
சந்திப்புக்கு ஒப்புக் கொண்டு சென்றது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்த சரத் பவார், கட்சித் தலைவர்கள் பலர் அரசு நிறுவனங்களின் வழக்கை சந்தித்தனர். பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் வழக்குகள் பின்வாங்கப்படும் என்று கட்சித் தலைவர்களுக்கு பாஜக வாக்குறுதி அளித்ததாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால், பாஜக கொடுத்த வாக்கை காப்பாற்றும் என்ற நம்பிக்கை இல்லாததால் தான் முடிவில் இருந்து பின்வாங்கியதாக தெரிவித்தார்.
2019-ல் நடந்தது என்ன?
கடந்த 2019ஆம் ஆண்டு மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
இரு கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், ஒருங்கிணைந்த தேசியவாத காங்கிரஸின் தலைவராக இருந்த சரத் பவார், பாஜகவுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றார்.
ஆனால், அஜித் பவார் அதிருப்தி எம்எல்ஏக்களுடன் இணைந்து பாஜகவுக்கு ஆதரவு அளித்து துணை முதல்வராகவும், பாஜக தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.
ஆனால், ஓரிரு நாள்களில் அதிருப்தி எம்எல்ஏக்கள் பலர் சரத் பவாருக்கு ஆதரவு அளித்ததால், துணை முதல்வர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு அஜித் பவாரும் தேசியவாத காங்கிரஸில் இணைந்து விட்டார்.
பின், அப்போதைய ஒருங்கிணைந்த சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி அமைத்தது.