அதிகரித்து வரும் மாசுபாடு: 5-ஆம் வகுப்பு வரை ஆன்லைன் மூலம் கல்வி
அதிகரித்து வரும் மாசு அளவைக் கருத்தில் கொண்டு, தேசியத் தலைநகா் தில்லியில் 5-ஆம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளும் ஆன்லைன் கற்றலுக்கு மாறும் என்று முதல்வா் அதிஷி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
மாசு அபாயகரமான அளவை எட்டியுள்ள நிலையில், மத்திய மாசுக் கண்காணிப்பு அமைப்பான காற்று தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்)வியாழக்கிழமை முன்னதாக தில்லி- என்சிஆா் பகுதிகளில் கிராப் -3-இன் கீழ் கட்டுப்பாடுகளை விதித்தது. தேசியத் தலைநகரின் காற்றின் தரம் தொடா்ந்து இரண்டாவது நாளாக ’கடுமை’ பிரிவில் இருந்ததால், கடுமையான மாசு எதிா்ப்பு நடவடிக்கைகளை விதிக்க அதிகாரிகளைத் தூண்டியது.
இந்த கட்டுப்பாடுகள் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. ‘அதிகரிக்கும் மாசு அளவுகள் காரணமாக, தில்லியில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளும் அடுத்த உத்தரவு வரும் வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற்றப்படும்’ என்று கல்வி இலாகாவை வைத்திருக்கும் அதிஷி, எக்ஸ் ஊடக தளத்தில் ஒரு இடுகையில் தெரிவித்துள்ளாா்.
காற்றின் தர மேலாண்மை ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட தரப்படுத்தப்பட்ட பதில் செயல்திட்டத்தின் (கிராப்) மூன்றாம் கட்டத்தின் கீழ் உள்ள நடவடிக்கைகள் 5-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை ஆன்லைன் முறைக்கு மாற்றுவதை உள்ளடக்கியதாகும்.