``அண்ணாமலைக்கு எங்களின் பலம் நன்றாகத் தெரியும்'' - சென்னையில் கர்நாடகா துணை முதல...
அதிபர் டிரம்ப்பின் அகதிகள் திட்டத்தில் இணைய 67,000 தென் ஆப்பிரிக்கர்கள் விருப்பம்!
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அகதிகள் திட்டத்தில் இணைய 67,000க்கும் மேற்பட்ட தென் ஆப்பிரிக்கர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அதிபர் டிரம்ப்பின் புதிய திட்டத்தின் மூலம் அகதிகளாக அமெரிக்காவில் குடியேற விருப்பம் தெரிவித்த 67,000க்கும் மேற்பட்டோரின் பட்டியலை பெற்றுள்ளதாக தென் ஆப்பிரிக்காவிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
கடந்த பிப்.7 அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென் ஆப்பிரிக்க அரசு அந்நாட்டிலுள்ள நில உரிமையாளர்களின் மீது இன ரீதியான வன்முறையை தூண்டுவதாகக் குற்றம்சாட்டி அமெரிக்கா வழங்கும் நிதியை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் தலைமை செயலாளர் மார்கோ ரூபியோவிற்கு வழங்கப்பட்ட உத்தரவில் தென் ஆப்பிரிக்காவின் சிறுபான்மையினரான ஆஃப்ரிக்கானெர்ஸ் எனும் வெள்ளையின மக்கள் இனப்பாகுபாட்டினால் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு அவர்கள் அகதிகள் திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் குடியேறுவதற்கு தேவையான மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளபட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: துனிசியா: 2 ஆண்டுகளுக்குள் 3ஆவது பிரதமர் நியமனம்!
இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ் குடியேற விருப்பம் தெரிவித்த 67,000 தென் ஆப்பிரிக்கர்களின் பட்டியலை அமெரிக்காவிலுள்ள தென் ஆப்பிரிக்க வர்த்தக சபை அமெரிக்க தூதரகத்திடம் சமர்பித்துள்ளது.
இந்த பட்டியல் குறித்த தகவல்கள் தூதரகம் தரப்பில் வெளியிடப்படாத நிலையில், அந்த பட்டியலில் மொத்தம் 67,042 பெயர்கள் உள்ளதாகவும் அதில் பெரும்பாலானோர் 25 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் என வர்த்தக சபையின் தலைவர் நீல் டைமண்ட் கூறியுள்ளார்.
மேலும், அதிபர் டிரம்ப்பின் இந்த திட்டத்தை செயல்படுத்த அடுத்தக்கட்ட உத்தரவுகளுக்காக தென் ஆப்பிரிக்காவிலுள்ள அமெரிக்க தூதரகம் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளாது.
முன்னதாக, அமெரிக்காவுக்கான தென் ஆப்பிரிக்காவின் தூதரை வெளியேற்றிய அதிபர் டிரம்ப், அந்நாட்டில் வெள்ளையின மக்களுக்கு எதிராக இனவெறி தூண்டப்பட்டு அவர்களது நிலங்கள் பறிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், காஸாவிலுள்ள பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலை இனப்படுகொலை எனக் கூறி ஐ.நா. நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்கா வழக்கு தொடர்ந்துள்ளதை விமர்சித்த அவர் ஹமாஸ் போராளிக்குழுவையும், ஈரான் நாட்டையும் தென் ஆப்பிரிக்கா ஆதரித்து அமெரிக்கர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவதாகக் கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் வாழும் சுமார் 2.7 மில்லியன் வெள்ளையின மக்களில் (ஆஃப்ரிக்கானெர்ஸ்) பெரும்பாலானோர் கடந்த 17 ஆம் நூற்றாண்டில் அந்நாட்டில் குடியேறிய டச்சு மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த காலனிக்காரர்களின் நேரடி வம்சாவளியினர் என்பது குறிப்பிடத்தக்கது.