இந்தோனேசியா: படகு கவிழ்ந்து ஆஸ்திரேலியப் பெண் பலி! 2 பேர் படுகாயம்!
இந்தோனேசியாவின் பாலி தீவின் அருகே சுற்றுலாப் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
இந்தோனேசியாவின் பாலி தீவிலுள்ள துறைமுகத்திலிருந்து நுஸா பெனிடா எனும் பிரபல சுற்றுலாத் தீவை நோக்கி இன்று (மார்ச் 21) 11 ஆஸ்திரேலியர்கள் உள்பட 13 பேர் ஸீ டிராகன் எனும் படகில் பயணித்து கொண்டிருந்தனர். மேலும், இன்று வழக்கத்தை விட கடலில் மிகப் பெரிய அலைகள் உருவானதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கடலுக்கு அடியிலுள்ள காட்சிகளை ரசித்தவாறு பயணம் மேற்கொண்டிருந்தபோது, ராட்சச அலை தாக்கியதில் அந்த படகிலிருந்த அன்னா மேரி (வயது 39) எனும் ஆஸ்திரேலியப் பெண் கடலில் தூக்கி வீசப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: அதிபர் மாளிகையை மீண்டும் கைப்பற்றிய சூடான் ராணுவம்!
இதனைத் தொடர்ந்து, எழுந்த மற்றொரு அலையினால் அவர்களது படகு தலைக்குப்புற கடலில் கவிழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக, அருகிலிருந்த படகு அங்கு விரைந்து கடலில் கவிழ்ந்த அந்த படகின் இந்தோனேசியாவைச் சேர்ந்த பணியாளர்கள் இருவர் உள்பட 12 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர்.
இருப்பினும், மீட்கப்பட்டவர்களில் இருவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவருக்கும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. மேலும், பலியான அன்னாவின் உடலையும் மீட்புப் பணியாளர்கள் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சுமார் 28 கோடி மக்கள் வாழும் 17,000க்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கிய நாடான இந்தோனேசியாவில் பெரும்பாலான மக்கள் படகு போக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அங்கு ஏற்பட்ட படகு விபத்துகளில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.