செய்திகள் :

'அதிமுக கோமாளிக்கூடாரம்; ஓ.பி.எஸ் போரிடும் தகுதி இல்லை; விஜய்தான்' - மருது அழகுராஜ் எக்ஸ்க்ளூஸிவ்

post image
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடுகளின் ஆசிரயராக இருந்த மருது அழகுராஜ் இப்போது ஓ.பி.எஸ் அணியில் இருக்கிறார். ஆனால், சமீபமாக விஜய்க்கும் தவெகவுக்கும் ஆதரவாக பல்வேறு கருத்துகளையும் பேசி வருகிறார். அவரை தொடர்புகொண்டு பேசினேன்.
மருது அழகுராஜ்

``சமீபமாக விஜய்க்கு ஆதரவாக X தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறீர்களே. விஜய்யின் அரசியலை எப்படி பார்க்கிறீர்கள்?"

``திமுக, அதிமுக என்கிற இருதுருவ அரசியலில் தமிழக மக்கள் அலுத்துப் போயிருக்கிறார்கள். ஒரு மாற்றத்துக்காக காத்திருக்கிறார்கள். அந்த மாற்று அரசியலை தேமுதிகவை தொடங்கி விஜயகாந்த் கொடுப்பதாக பேசினார். ஆனால், காலப்போக்கில் அவரால் நீடித்து நிற்க முடியவில்லை. திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்தே அவர் கரைந்துவிட்டார். ஆனால், இப்போது இந்த இருதுருவ அரசியலில் அதிமுக பின்தங்கிவிட்டது. புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பல பிளவுகளுக்கு உட்பட்டு தேர்தலை கண்டு அஞ்சி தேர்தலை புறக்கணிக்கும் கட்சியாக மாறிவிட்டது. இதை உணர்ந்து சரியான சமயத்தில் விஜய் அரசியலுக்கு வருகிறார். விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தி ஆகச்சிறந்தவர்களை தன்னுடைய கொள்கைத் தலைவர்களாக மக்களுக்கு அடையாளப்படுத்தியிருக்கிறார். சினிமா வணிகத்தில் உச்சத்தில் இருக்கும் போது சரியான பருவத்தில் சரியான நோக்கத்தோடு அரசியலுக்கு வருகிறார் என்பதால்தான் அவரை ஆதரிக்கிறேன். மக்கள் செல்வாக்கு பெற்ற 'Charismatic' தலைவராக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் வழியில் அரசியலுக்கு வந்திருக்கும் விஜய்யை வரவேற்கிறேன்.”

``திரைத்துறையிலிருந்துவந்து புதிதாக கட்சி தொடங்கி எம்.ஜி.ஆரை தவிர வேறு யாருமே அவர்கள் நினைத்த இலக்கை தமிழகத்தில் எட்டியதில்லையே. விஜய் மட்டும் எப்படி சாதிப்பார் என நம்புகிறீர்கள்?”

``நீங்கள் அரசியலில் தோல்வியுற்றவர்களை பார்க்கிறீர்கள். நான் நேர்மறையாக அரசியல் வென்ற கலைத்துறையினரின் வரிசையில் விஜய்யை வைத்து பார்க்கிறேன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா, எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்த விஜயகாந்த் இவர்களின் வரிசையில் விஜய்யும் மக்கள் மனதில் இடம்பிடிப்பார். அந்தளவுக்கு அவருடைய திட்டமிடல்கள் சிறப்பாக இருக்கிறது. மாநாட்டிலேயே எடுத்துக்கொள்ளுங்களேன். தமிழ்த்தேசியத்தையும், திராவிடத்தையும் பேசியிருப்பார். ஏற்புடைய விஷயங்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ அதையெல்லாம் எடுத்து பேசியிருப்பார். கீதை, பைபிள், குரான் என கையிலேந்தி அனைத்து மதத்தவருக்குமானவராக நின்றிருப்பார். தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு முதிர்ச்சியோடு அவர் செய்யும் விஷயம் நல்லதொரு அரசியல் தொடக்கமாக இருக்கிறது.”

விஜய்

``மாற்றுக்கட்சியினர் விஜய் கட்சியில் இணைய ஆரம்பித்துவிட்டார்கள். நீங்கள் அப்படி எதுவும் முயற்சியில் இருக்கிறீர்களா?”

``அவரை ஆதரிக்கிறேன் என்பதற்காக அவர் கட்சியில் இணையப் போகிறேன் என்று பொருளல்ல. இப்போது வரைக்கும் அப்படியான பேச்சுவார்த்தைகள் எதுவும் நடக்கவில்லை. காலம் என்னை அப்படியொரு களத்துக்கு அனுப்பினால் அதற்கும் தயாராக இருக்கிறேன் என நினைக்கிறேன். ஜெயா பப்ளிகேஷனின் நிர்வாக ஆசிரியராக இருந்திருக்கிறேன். அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடுகளின் ஆசிரியராக 15 ஆண்டுகளுக்கு மேல் இருந்திருக்கிறேன். அதிமுகவின் கொள்கை வரைவுகளையும் தேர்தல் அறிக்கைகளையும் எழுதியிருக்கிறேன். கடந்த தேர்தலில் போட்டியிட்டு 70,000 வாக்குகளுக்கு மேல் வாங்கியிருக்கிறேன். அதிமுகவில் என்னை நேசிக்கக்கூடிய நண்பர்கள் நிர்வாகிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அனைவரிடமும் கலந்துபேசி எதிர்காலத்தில் நல்ல முடிவை எடுப்பேன்.”

``அதிமுகவின் மீது நம்பிக்கை இழந்துவிட்டீர்களா?”

``தொடக்கம், வளர்ச்சி, உச்சநிலை, வீழ்ச்சி தனிமனிதராக இருந்தாலும் அமைப்பாக இருந்தாலும் சரி அதை இந்த நான்கு கட்டங்களுக்குள் அடக்கிவிட முடியும். அதிமுக உச்சபட்ச வெற்றிகளை பார்த்துவிட்டது. அந்த இயக்கத்தை அதே நிலையில் தக்கவைக்க தன்னலமற்று உழைக்கும் தலைவர்களை கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணவில்லை. அதிமுக மொத்தமாக கோமாளிக் கூடாரத்திடம் சிக்கியிருக்கிறது. கட்சியில் புதிதாக இணைய ஆள் இல்லை. விலகிச்செல்லும் ஆட்களிடம் பேச மனமில்லை. 'போன மாட்டையும் தேடமாட்டான். வந்த மாட்டையும் கட்டமாட்டன்.' என்கிற அவல நிலைக்கு அதிமுக சென்றுவிட்டது.

புரட்சித்தலைவர் வகுத்த விதிகளை தங்களுக்கென சுயநலமாக மாற்றுகிறார்கள். புரட்சித்தலைவிக்குதான் நிரந்தர பொதுச்செயலாளர் இருக்கை எனக் கூறிவிட்டு அந்த இருக்கையை அபகரிக்கிறார்கள். அதிமுகவில் நேர்மைக்கு இடமே இல்லை. தொண்டர்கள் அலுத்துவிட்டார்கள். இரட்டை இலையை தவிர வேறு சின்னங்களை தேடாத மக்கள் இப்போது வேறு வேறு கட்சிகளுக்கு மாறிவிட்டார்கள். நாடாளுமன்ற தேர்தலில் 13 இடங்களில் மூன்றாம் இடத்துக்கு போய்விட்டது. இந்த நிலையிலிருந்து கட்சியை மீட்டெடுக்கும் வல்லமையோ சக்தியோ எடப்பாடிக்கு இல்லவே இல்லை.”

எடப்பாடி பழனிசாமி

``அதனால்தானே ஓ.பி.எஸ் பக்கம் சென்றீர்கள். அவர் முகாமிம் நிலைமை எப்படியிருக்கிறது?”

``மூன்று முறை முதல்வராக இருந்த ஓ.பி.எஸ் யை அவர்கள் நடத்தியவிதம் எனக்கு பிடிக்கவில்லை. தண்ணீர் பாட்டிலை வீசி எறிந்து அவரை கட்சியிலிருந்து வெளியேற்றினார்கள். எடப்பாடியை எதிர்ப்பதற்கான கேடயமாகத்தான் ஓ.பி.எஸ் யை பார்த்தேன். ஆனால், ஓ.பி.எஸ் சமகால அரசியலில் போரிடும் தகுதியோடு இல்லை. எதிரியை பதற்றத்தோடே வைத்திருக்க வேண்டும். அதையெல்லாம் அவர் செய்யவே இல்லை. திருச்சியில் ஒரு மாநாடை நடத்தினார். அத்தோடு மந்தமாகிவிட்டார். பா.ஜ.கவின் பேச்சை கேட்டு இராமநாதபுரத்தில் சென்று போட்டியிட்டார். அதிலெல்லாம் எங்களுக்கு உடன்பாடே இல்லை. தேனியில் வலுவாக இருக்கக்கூடியவரை அங்கே போட்டியிட விடாமல் 'Social Engineering' என எதையோ சொல்லி இராமநாதபுரத்துக்கு அழைத்துச் சென்றார்கள். தொண்டர்களின் உரிமையை மீட்க வந்தவர், ஒரு தொண்டனை கூட அங்கே நிறுத்தியிருக்கலாம். பா.ஜ.க சொன்னதை ஓ.பி.எஸ் தலைவணங்கி ஏற்றுக்கொண்டதை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. அவரின் அரசியல் மீதும் பெருத்த வருத்தம்தான். அதனால் இப்போது ஒதுங்கியே நிற்கிறேன்.”

``செங்கோட்டையன் போன்ற மிக மூத்த தலைவர்களே இப்போது அதிமுக-வில் அதிருப்தியை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்களே?”

``எரிமலை ஒரே நாளில் வெடித்துச் சிதறாது. சூட்டை ஏற்றி ஏற்றி ஒரு நாளில் மொத்தமாக வெடிக்கும். அப்படியொரு கட்டத்தில்தான் அதிமுக இருக்கிறது. புரட்சித்தலைவர் வகுத்த கட்சி விதிகளை தனக்கேற்றார் போல எடப்பாடி மாற்றிய போதே செங்கோட்டையன் வெகுண்டெழுந்திருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை இது காலங்கடந்த கோபம். முன்பே பேசியிருந்தால் பேரழிவை தவிர்த்திருக்கலாம். அதிமுகவிலிருந்து இளைஞர்களும் தொண்டர்களும் விஜய்யை நோக்கி நகர தொடங்கிவிட்டார்கள். அதை தடுக்கும் சக்தி கூட இவர்களுக்கு கிடையாது.”

செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி

``அதிமுக மீதும் அதிருப்தி. ஓ.பி.எஸ் மீதும் அதிருப்தி. ஆனால், நீங்கள் ஆதரிக்கும் விஜய் அதிமுக கூட்டணி பேசிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறதே?”

``அதலபாதாளத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கும் எடப்பாடி பரப்பிவிடும் வதந்திதான் இது. விஜய் மாநாட்டிலேயே தவெக தலைமையில்தான் கூட்டணி என்பதை அறிவித்துவிட்டாரே. போன தேர்தலில் `விசிக வருகிறது, காங்கிரஸ் வருகிறது மெகா கூட்டணி அமைக்கிறோம்’ என பில்டப் கொடுத்தார்கள். இந்த முறை `விஜய் வருகிறார்’ என்கிறார்கள். சரிந்து விழுந்த தன்னுடைய அரசியல் செல்வாக்கை தக்கவைக்க எடப்பாடி செய்யும் துஷ்பிரயோக வேலை இது.”

விஜய்

``திமுக அரசு கிட்டத்தட்ட நான்காண்டுகளை நிறைவு செய்யப்போகிறது. இந்த அரசின் செயல்பாடுகளை எப்படி பார்க்கிறீர்கள். விஜய்யும் திமுகவைத்தான் முதன்மை எதிரியாக கட்டமைக்கிறாரே?”

``பத்து ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்தபோது நல்ல அரசாங்கமாக செயல்படுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கும் கூட இருந்தது. ஆனால், அவர்களை நம்பி வாக்களித்தவர்களை திமுக ஏமாற்றிவிட்டது. அரசு ஊழியர்களே கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், மகளிர் உரிமைத்தொகை போன்ற ஒரு சில திட்டங்கள் மற்றும் கூட்டணியை வைத்து வென்றுவிட முடியும் என்கிற நம்பிக்கையில் திமுக இருக்கிறது. திமுகவை வீழ்த்த அவர்களின் எதிர் வாக்குகளை ஒரு புறத்தில் மொத்தமாக ஒன்றிணைக்க வேண்டும். அதற்கு வலுவான கூட்டணி தேவை. அந்த கூட்டணியை தவெக உருவாக்கும் என்கிற நம்பிக்கைதான் களத்தில் இருக்கிறது. அதிமுக எனும் ஓட்டைப்படகில் ஏற யாரும் தயாராக இல்லை.”

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

பஞ்சமி நிலம்: ஓபிஎஸ் நிலப்பட்டா ரத்து... எஸ்சி, எஸ்டி ஆணையம் வழங்கிய அதிரடி உத்தரவு என்ன?

தேனியில் பஞ்சமி நிலத்தை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வாங்கியதாக கூறி, அந்நிலத்திற்கான பட்டாவை ரத்து செய்யுமாறு சென்னை எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 1991ம... மேலும் பார்க்க

`அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை!' - சாடும் ஓபிஎஸ்

'மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் வித்திடப்பட்ட அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை' என்று எடப்பாடியை சாடி ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெ... மேலும் பார்க்க

`சமண சமயத்தினருக்கு சொந்தமான திருப்பரங்குன்றம்’ - உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் புதிய மனு

திருப்பரங்குன்றம் விவகாரம்கடந்த சில நாள்களாக திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்ஹாவில் வழிபடுவது குறித்து இரண்டு மதங்களைச் சேர்ந்த அமைப்பினர் பல்வேறு கருத்துகளை தெரிவித்தும் போராட்டமும் நடத்தி வருகிறார்... மேலும் பார்க்க

Vijay: `பணக்கொழுப்பு; தனிப்பட்ட விருப்பம்'- விஜய் - PK சந்திப்புக்கு அரசியல் கட்சிகளின் ரியாக்சன்

தவெக தலைவர் விஜய்யும் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோரும் சமீபத்தில் சந்தித்து முக்கியமான ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். பிரஷாந்த் கிஷோர் விஜய்யின் கட்சிக்காக வியூகங்களை வகுத்துக் கொடுக்கவிருப்... மேலும் பார்க்க

செங்கோட்டையன் : `பொதுச்செயலாளர் பெயரை களங்கப்படுத்த திமுக திட்டமிட்டு செயல்படுகிறது' - செல்லூர் ராஜூ

அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கியதற்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோவை மாவட்டத்தில் விவசாய சங்கத்தினர் நடத்திய பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கவில்லை... மேலும் பார்க்க

TVK: ``தவெக-வில் இருப்பவர்கள் அனைவருமே குழந்தைகள்தான்"-அண்ணாமலை

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தைத் தொடர்ந்து, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு 48 நாள் விரதத்தைத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்தார்.இந்நிலையில் 48 நாட்கள் வ... மேலும் பார்க்க