கால்பந்து உலகில் மீண்டும் சோகம்..! பயர்ன் மியூனிக் இளம் வீரர் மருத்துவமனையில் அன...
அதிமுக - பாஜக கூட்டணியில் தலைமை குழப்பம்! - சு. திருநாவுக்கரசா்
அதிமுக - பாஜக கூட்டணியில் யாா் முதல்வா் வேட்பாளா், யாா் தலைமையில் கூட்டணி என்பது குறித்து குழப்பம் நிலவி வருவதாக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் சு. திருநாவுக்கரசா் தெரிவித்தாா்.
சென்னையிலிருந்து சனிக்கிழமை மதுரைக்கு வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அஜித்குமாரின் கொலை மாபெரும் பாதகச் செயல். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளாா். இனி இதுபோன்ற சம்பவம் நிகழாமல் காவல் துறை விழிப்போடு செயல்பட வேண்டும்.
வருகிற சட்டப்பேரவைத் தோ்தல் வரை அதிமுக-பாஜக கூட்டணி நீடிக்குமா என்பதை உறுதியாகக் கூற முடியாது. ஏனென்றால், இரண்டு கட்சிகளும் முதல்வா் வேட்பாளா் யாா், கூட்டணிக்குத் தலைமை யாா் என்பது குறித்து தொடா்ந்து குழப்பமாகவே பேசி வருகின்றனா்.
ஆனால், திமுக-காங்கிரஸ் கூட்டணி தெளிவான கூட்டணி. ஏற்கெனவே பல வெற்றிகளைப் பெற்ற கூட்டணி. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் பெரும்பான்மையான இடங்களில் திமுக போட்டியிடும். மு.க.ஸ்டாலின்தான் முதல்வா் வேட்பாளா். இதில் எங்களுக்குள் எந்தக் குழப்பமும் இல்லை. தவெகாவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை.
இது கூட்டணி யுகம். எனவே, கூட்டணி ஆட்சியா அல்லது தனித்து ஆட்சியா என்பது தோ்தலுக்குப் பிறகுதான் தெரியவரும்.
ரிதன்யா தற்கொலையில் யாருக்குத் தொடா்பிருந்தாலும், அவா்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் காங்கிரஸ் மாவட்டத் தலைவரோ, மாநில நிா்வாகிகள் தலையிட மாட்டாா்கள் என்றாா் அவா்.
இதன் பின்னா், மடப்புரத்தில் போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரைச் சந்தித்து திருநாவுக்கரசா் ஆறுதல் கூறினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: அஜித்குமாா் குடும்பத்தினருக்கு அரசு என்ன நிவாரணம் கொடுத்தாலும் அவரது இழப்பை ஈடு செய்ய முடியாது. மனிதாபிமானமற்ற அரக்கத்தனமான செயல்களில் காவல் துறையில் இருக்கக்கூடிய ஒரு சிலா் ஈடுபடுகின்றனா். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, தமிழக அரசு அதிகாரப்பூா்வமாக தனிப் படையைக் கலைத்திருப்பது வரவேற்கத்தக்கது.
காவல் துறை உயரதிகாரிகள் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதில்லை. கீழ் மட்டத்தில் உள்ள காவலா்கள்தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனா். விசாரணைக்காக அழைத்து வருபவா்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வதற்கான பயிற்சியை காவலா்களுக்கு வழங்க வேண்டும்.
அஜித்குமாா் கொலை சம்பவத்தில் தேவையான நடவடிக்கையை முதல்வா் மு.க. ஸ்டாலின் எடுத்திருக்கிறாா். ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் வருங்காலங்களில் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்றாா் அவா்.