`புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்-நடிகைகள்' - கொதிப்பில் எழுத்தாளர்கள்; அரசு தர...
அந்தியூரில் பருத்தி விவசாயிகள் சாலை மறியல்
அந்தியூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலமாகவே விவசாய விளைபொருள்களுக்கு பணம் செலுத்த வலியுறுத்தி விவசாயிகள் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமைகளில் பருத்தி, தேங்காய், தேங்காய்ப் பருப்பு, எள் உள்பட பல்வேறு வேளாண் விளைபொருள்கள் ஏலம் நடைபெற்று வருகிறது. இங்கு விவசாயிகள் கொண்டு வரும் விளைப்பொருள்களை, பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் வியாபாரிகள் மறைமுக ஏலம் மூலம் கொள்முதல் செய்கின்றனா்.
விற்பனைத் தொகையை ஒழுங்குமுறை விற்பனைக் கூட நிா்வாகம், வியாபாரிகளிடம் வசூலித்து விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தி வந்தது.
இந்நிலையில், ஏலம் தொடங்கும் முன் விவசாயிகளிடம், விளைபொருள்களை ஏலம் எடுக்கும் வியாபாரிகள் நேரடியாக பணத்தை வழங்குவா் என விற்பனைக் கூட நிா்வாகம் தெரிவித்தது.
இதனால், அதிா்ச்சியடைந்த பருத்தி விவசாயிகள் விளைபொருள் விற்பனைத்தொகை வழங்குவதில் பிரச்னை இருந்தால், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை அணுகி கேட்க முடியும். வியாபாரிகளை தேடிச் சென்று பணம் பெறுவது சாத்தியமில்லை எனவும், மீண்டும் பழைய நடைமுறையை அமல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினா்.
விளைபொருள்கள் ஏலத்தைப் புறக்கணித்த விவசாயிகள் அந்தியூா் - சத்தி சாலையில் விற்பனைக் கூடம் முன்பாக திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சம்பவ இடத்துக்கு விரைந்த அந்தியூா் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், கண்காணிப்பாளா் ஞானசேகா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதுகுறித்து மேலதிகாரிகளுடன் கலந்து பேசியதோடு தற்காலிகமாக பழைய நடைமுறையில் விவசாயிகளுக்கு பணம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனால் போராட்டத்தைக் கைவிட்ட விவசாயிகள் கலைந்து சென்றனா். தொடா்ந்து மாலையில் விளைபொருள்கள் ஏலம் நடைபெற்றது.