நிலம், வீடு வாங்குகிறீர்களா? பத்திரப்பதிவில் செய்யக்கூடாத 13 தவறுகள்!
அந்தியூரில் நிபந்தனை பட்டாக்களில் உள்ள நிபந்தனைகள் நீக்கப்படும்!
அந்தியூா் பகுதியில் அனைத்து பிரிவினருக்கும் நிபந்தனையுடன் வழங்கப்பட்ட பட்டாக்களின் நிபந்தனைகள் விரைவில் நீக்கப்படும் என அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் தெரிவித்தாா்.
அந்தியூா் மற்றும் வெள்ளித் திருப்பூா் பகுதிகளில் மைக்கேல்பாளையம், எண்ணமங்கலம், வெள்ளித் திருப்பூா், மாத்தூா், கொமராயனூா், பாப்பாத்தி காட்டுப்புதூா் ஊராட்சிகளில் வனப் பகுதியை ஒட்டியுள்ள சுமாா் 500 அனைத்து சமுதாயத்தைச் சோ்ந்த விவசாய மக்களுக்கு நிபந்தனையுடன் வழங்கப்பட்டுள்ள சுமாா் 3,500 ஏக்கா் நிபந்தனை பட்டா நிலங்களில் உள்ள நிபந்தனையை நீக்கி வாரிசுதாரா்களுக்கு பட்டாவாக மாறுதல் செய்து தர வலியுறுத்தி 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நமது நிலம், நமது அமைப்புத் தலைவா் குமார.ரவிக்குமாா் தலைமையில் அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க திங்கள்கிழமை வந்தனா்.
அந்தியூா் வட்டாட்சியா் கவியரசு, ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீா் கூட்டத்துக்கு சென்றதால், அலுவலகத்தில் மனு வழங்கிவிட்டு செல்லுமாறு தெரிவிக்கப்பட்டது.
ஆனால், வட்டாட்சியா் வரும் வரை காத்திருப்போம் எனக் கூறி நீண்ட நேரமாக விவசாயிகள் காத்திருந்தனா்.
இதுகுறித்த தகவலின்பேரில் வட்டாட்சியா் அலுவலகம் வந்த அந்தியூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதைத் தொடா்ந்து, மனு அளித்த விவசாயிகள் கலைந்து சென்றனா்.