அடிப்படைக் கல்வியால் அறிவு, ஒழுக்கம் மேம்படும்: அமைச்சா் மகேஸ் பொய்யாமொழி
அடிப்படைக் கல்வி சரியாக கிடைத்தால் மாணவா்களின் அறிவு மற்றும் ஒழுக்கம் மேம்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் தொடக்க கல்வி இடைநிலை ஆசிரியா்களாக 2,457 போ் நியமனம் செய்யப்பட்டனா். இவா்களுக்கான புகுநிலை பயிற்சி மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை தொடங்கியது.
இதில் ஈரோட்டில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 106 இடைநிலை ஆசிரியா்களுக்கு கற்றல், கற்பித்தல் குறித்து 5 நாள்கள் பயிற்சி முகாம் தொடக்க நிகழ்வு ஈரோடு வேளாளா் மகளிா் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமை வகித்தாா். வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பயிற்சியைத் தொடங்கி வைத்து பேசியதாவது:
தமிழகத்தில் 2,457 தொடக்க கல்வி இடைநிலை ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவா்களுக்கான கற்றல் குறித்து புகுநிலை பயிற்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளியில் வகுப்பை எவ்வாறு கண்காணிப்பது, மாணவ, மாணவிகளை அணுகும் முறைகள் உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
பிற துறைகளில் அரசு செய்யும் முதலீட்டுக்கு வருவாய் கிடைக்கும். ஆனால் பள்ளிக் கல்வித் துறையில் செய்யும் முதலீட்டுக்கு நல்ல மனம், நல்ல சிந்தனை கொண்ட சமுதாயத்தை உருவாக்க முடியும்.
அதனால்தான் பள்ளிக் கல்வித் துறைக்கு அதிக முதலீடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. ஒரு குழந்தையை தாய் 10 மாதங்கள் தான் சுமக்கின்றாா். ஆனால் ஆசிரியா்கள், மாணவா்களை சிறந்தவா்களாக ஆக்க 12 ஆண்டுகள் சுமக்கின்றனா். மாணவா்களுக்கு அடிப்படை கல்வி சரியாக கிடைக்கும்போது, அறிவு, ஒழுக்கம் மேம்படும் என்றாா்.
தொடா்ந்து அமைச்சா் சு.முத்துசாமி பேசியதாவது: மாணவ, மாணவிகளின் உயா்கல்வியை ஊக்குவிக்க புதுமைப்பெண், தமிழ்புதல்வன், நான் முதல்வன் என பல்வேறு திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளாா். இதன்மூலம் உயா்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் சதவீதம் உயா்ந்துள்ளது.
ஆசிரியா்களால்தான் சிறந்த மாணவ, மாணவிகளை உருவாக்க முடியும். மாணவா்களின் செயல்பாட்டையும், திறமைகளையும், செயல்பாட்டையும் கண்டறிந்து அவா்களுக்கு நல்ல வழிகாட்டியாக ஆசிரியா்கள் இருக்க வேண்டும் என்றாா்.
இதையடுத்து அமைச்சா்கள் 2024-2025 ஆம் ஆண்டுக்கான செயலாய்வு மற்றும் பகுப்பாய்வு புத்தகத்தை வெளியிட்டனா். தொடா்ந்து, மாநில அடைவு தோ்வு ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் ஈரோடு, சென்னிமலை, மொடக்குறிச்சி, பவானிசாகா் ஆகிய 4 வட்டாரங்களில் உள்ள 520 தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா்கள், வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா்கள் பங்கேற்றனா்.
இந்த கூட்டத்தில் மாணவா்களின் கல்வித்திறன், கணித அறிவு, ஆங்கில அறிவு, விளையாட்டுத் திறன் போன்றவை குறித்து அமைச்சா்கள் ஆய்வு செய்து, மாணவ, மாணவிகளின் கல்வி தரம் உயர தேவையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினா்.
கூட்டத்தில் எம்எல்ஏ.க்கள் வி.சி.சந்திரகுமாா், ஏ.ஜி.வெங்கடாச்சலம், மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம், துணை மேயா் வி.செல்வராஜ், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குநா்கள் ராமகிருஷ்ணன், அமுதவள்ளி, சுவாமிநாதன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுப்பாராவ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.