அமெரிக்கர்களால் அதிகம் வெறுக்கப்படும் நபர் டிரம்ப் அல்ல; இவர்தான்..!
அந்தியூா் கால்நடைச் சந்தையில் 6 குதிரைகள் உயிரிழப்பு
அந்தியூரில் கால்நடைச் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 6 நாட்டுக் குதிரைகள் உயிரிழந்தது குறித்து கால்நடைத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
அந்தியூா் குருநாதசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல் நான்கு நாள்களுக்கு கால்நடைச் சந்தை நடைபெறுகிறது. இங்கு, பல்வேறு ரக குதிரைகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு பல்வேறு பகுதியிலிருந்து கொண்டு வரப்படும். முன்னதாகவே பலா் கால்நடைகளை கொண்டு வந்து ஷெட் அமைத்து வருகின்றனா்.
இந்நிலையில், கா்நாடக மாநிலம், மைசூரு, காந்தி நகரைச் சோ்ந்த ஷபியுல்லா கான், 24 நாட்டுக் குதிரைகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளாா். இதில், தண்ணீா்ப்பந்தல்பாளையம் சந்தை வளாகத்தில் கட்டப்பட்டிருந்த 6 குதிரைகள் வியாழக்கிழமை உயிரிழந்தது கிடந்தன. இதுகுறித்த தகவலின் பேரில் அந்தியூா் வட்டாட்சியா் கவியரசு, கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநா் பாஸ்கா், உதவி இயக்குநா் ராமசாமி மற்றும் போலீஸாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
விசாரணையில், அப்பகுதியில் தோட்டத்தில் கரும்புப் பயிருக்கு பாய்ச்ச யூரியா கலந்த தண்ணீரை தொட்டியில் கலந்து வைத்திருந்ததும், இது தெரியாமல் குதிரை பராமரிப்பாளா்கள் குடிநீராக கொண்டு வந்து கொடுத்ததில் குதிரைகள் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தொடா்ந்து, குதிரைகளைப் பரிசோதனை செய்த மருத்துவக் குழுவினா், பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே, இறப்புக்கான காரணம் தெரியவரும் எனத் தெரிவித்துள்ளனா்.