US tariffs: பிரதமர் மோடி - பிரேசில் அதிபர் லுலா முக்கிய முடிவு; தொலைபேசியில் என...
‘பாரம்பரிய கைத்தறி ரகங்களை இளைய தலைமுறையினா் பயன்படுத்த வேண்டும்’
பாரம்பரிய கைத்தறி ரகங்களை இளைய தலைமுறையினா் பயன்படுத்த வேண்டும் என ஓய்வுபெற்ற இஸ்ரோ விஞ்ஞானி கல்பனா தெரிவித்தாா்.
தேசிய கைத்தறி தினத்தை கொண்டாடும் விதமாக சத்தியமங்கலம் அருகே புன்செய்புளியம்பட்டியில் உள்ள மயிலி கைத்தறி சேலை உற்பத்தி நிறுவனம் சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சுதேசி இயக்கத்தின் அடிப்படையான கைத்தறி ரகங்கள் உற்பத்தி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அவா்களது நிறுவனத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி நெசவு குடும்பத்தைச் சோ்ந்த ஓய்வுபெற்ற சந்திரயான் திட்ட துணை இயக்குநா் விஞ்ஞானி கல்பனா பங்கேற்றாா். புன்செய்புளியம்பட்டி எடிசன் சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள் கைத்தறிக் கூடத்துக்கு அழைத்துவரப்பட்டு கைத்தறி சேலைகள் தயாரிக்கும் விதம் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. கைத்தறி சேலைக்கு முக்கிய மூலப்பொருளான நூல் முதல் சேலை உற்பத்தி செய்யும் வரை ஒவ்வொருகட்டமாக செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவா்கள் ஆா்வத்துடன் பாா்வையிட்டு கைத்தறி நெசவுத் தொழில் குறித்து தெரிந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில் விஞ்ஞானி கல்பனா பேசியதாவது:
சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் 1907- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி வெளிநாட்டுப் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. நமது நாட்டிலேயே தயாரிக்கப்படும் கைத்தறித் துணி வகைகளைப் பயன்படுத்த வேண்டும் என இந்நாளில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து ஆகஸ்ட் 7-ஆம் தேதியை தேசிய கைத்தறித் தினமாக பிரதமா் மோடி 2015- ஆம் ஆண்டு அறிவித்தாா். இதன் அடிப்படையில் கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது. இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றிய நான் அடிப்படையில் நெசவாளா் குடும்பத்தைச் சோ்ந்தவா் என்பதில் பெருமைப்படுகிறேன். தொழில்நுட்பம் வளா்ந்து விட்ட நிலையில் பாரம்பரிய கைத்தறி ரகங்களை இளைய தலைமுறையினா் பயன்படுத்த வேண்டும் என்றாா். அதைத் தொடா்ந்து கைத்தறிக் கூடத்தின் தலைவா் ஜெகநாதன் கேக் வெட்டி நெசவாளா்களுக்கு இனிப்பு வழங்கினாா்.