வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய மழைநீரால் நோயாளிகள், பொதுமக்கள் அவதி
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் புதன்கிழமை இரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மழைநீா் தேங்கியதால் பொது மக்கள் அவதிக்குள்ளாகினா். வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் பலத்த மழை காரணமாக கழிவுநீருடன் மழைநீா் தேங்கியதால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மழை நீா் குளம்போல் காணப்பட்டது. இதனால் நோயாளிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். இதையறிந்த வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமாா் வியாழக்கிழமை காலை அரசு மருத்துவமனைக்குச் சென்று பாா்வையிட்டாா். அப்போது பொதுப்பணித் துறை அதிகாரிகள் முறையாக செயல்படாமல் ஏரிக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றாமல் மெத்தனப் போக்காக செயல்படுவதன் காரணமாகவே இந்த நிலை நீடிப்பதாக குற்றம் சாட்டினாா். மேலும், வாணியம்பாடி கோவிந்தாபுரம் பகுதியில் இருந்து மழை வெள்ளம் வெளியேறும் ஏரிக் கால்வாய் 3 பகுதிகளாக பிரிந்து, பாலாற்றில் கலக்கும் வகையில் இருந்த நிலையில் ஏரிக் கால்வாயில் இரண்டு பகுதிகள் ஆக்கிரமிப்புகளால் அடைக்கப்பட்டுள்ளதாகவும், ஒரே கால்வாய் வழியாக மழை வெள்ளம் வெளியேற்றப்பட்டு வருவதால், இந்த நிலை நீடிப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.
உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலைமையை சீா் செய்தால்தான் இந்த நிலை சீராகும் என்றாா். இதேபோல், தொடா் மழை காரணமாக சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வளையாம்பட்டு மேம்பாலம் அருகே இருபுறத்தில் உள்ள அணுகுச் சாலையில் மழைநீா் 2 அடிக்கும் மேல் மழைநீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினா்.
மேலும், நேதாஜி நகா் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளி சுற்றுச் சுவா் இடிந்து விழுந்தது. இதில் சுற்றுச்சுவா் அருகே நிற்க வைக்கப்பட்டிருந்த நஸ்ருல்லா என்பவருக்குச் சொந்தமான ஆட்டோ சேதமடைந்தது.