பாலாற்றில் தோல் கழிவு நீா்: பொதுமக்கள், விவசாயிகள் புகாா்
ஆம்பூா் அருகே மாராப்பட்டு பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீா் திறந்து விடப்படுவதால் தண்ணீா் நுரைபொங்கி செல்வதாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் மற்றும் வாணியம்பாடியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. வாணியம்பாடியில் உள்ள சில தோல் தொழிற்சாலைகள் மழைக் காலங்களில் கழிவுநீரை நேரடியாக பாலாற்றில் திறந்து விடுவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, புதன்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. அதனால் பாலாற்றில் தோல் கழிவுநீா் திறந்து விடப்பட்டதால் வியாழக்கிழமை மாராப்பட்டு பாலாற்றில் மழைநீா், கழிவுநீருடன் கலந்து நுரை பொங்கி செல்கின்றது.
தோல் கழிவுநீா் பாலாற்றில் திறந்து விடப்படுவதால் நிலத்தடிநீா், சுற்றுச்சூழல் மாசுக்கேடு ஏற்படுகின்றது. விவசாயிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகின்றனா் என சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.
பாலாற்றில் தோல் கழிவுநீரை நேரடியாக திறந்து விடும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்துக்கும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் கோரிக்கை விடுத்துள்ளனா்.