Automobile Sales சரிவு ஏன் | EID Parry India q1 results-ல் கவனிக்க வேண்டியது | I...
``கபில் சர்மாவின் மும்பை ரெஸ்டாரண்ட் மீதும் தாக்குவோம்'' - மிரட்டும் லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க்
கனடாவின் சுர்ரே என்ற இடத்தில் காமெடி நடிகர் கபில் சர்மாவிற்கு ரெஸ்டாரண்ட் இருக்கிறது. இந்த ரெஸ்டாரண்ட் மீது ஏற்கெனவே கடந்த மாதம் 10-ம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இத்துப்பாக்கிச்சூட்டிற்கு காலிஸ்தான் தீவிரவாதி ஹர்ஜீத் சிங் பொறுப்பு ஏற்று இருந்தார். கபில் சர்மாவின் காமெடி ஷோவில் சீக்கியர்களின் பாரம்பரிய உடை மற்றும் அவர்களின் நடத்தை குறித்து ஒருவர் தவறாக பேசியதால் இத்துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இப்போது மீண்டும் `கேப்ஸ் கபே' என்ற அந்த ரெஸ்டாரண்ட் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. இம்முறையும் இரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் ரெஸ்டாரண்ட் மீது சரமாரியாக சுட்டனர். மொத்தம் 25 தோட்டாக்கள் ரெஸ்டாரண்ட் மீது சுடப்பட்டது.

அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இது குறித்து கேள்விப்பட்டதும் கனடா போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ஆனால் அது குறித்து போலீஸார் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இத்துப்பாக்கிச்சூட்டிற்கு நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு காரணமாக இருந்த லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டம் பொறுப்பு ஏற்றுள்ளது.
இது தொடர்பாக அந்த கேங்க் வெளியிட்டுள்ள சமூக ஊடக செய்தியில்,''நாங்கள் இலக்கு வைத்திருந்த நபரை வெளியில் அழைத்தோம். வரவில்லை. எனவே செயலில் இறங்கினோம். எங்களது பேச்சை கேட்கவில்லையெனில் அடுத்த தாக்குதல் மும்பையில் நடைபெறும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
இது தவிர கோல்டி தில்லான் கேங்கும் இத்துப்பாக்கிச்சூட்டிற்கு பொறுப்பு ஏற்பதாக சமூக ஊடங்களில் தகவல் தெரிவித்துள்ளது. மும்பையில் தாக்குதல் நடத்துவோம் என்று தெரிவித்து இருப்பதால் அது குறித்து கவனத்தில் கொண்டுள்ளதாக மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.
லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் ஏற்கனவே பஞ்சாப் பாடகர் சிது முஸ்வாலாவை சுட்டுக்கொலை செய்தனர். தற்போது அவருக்கு ஹரியானா மாநிலம் தப்வாலி என்ற இடத்தில் சிலை வைக்கப்பட்டு இருந்தது. அந்த சிலை மீது லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் துப்பாக்கிச்சூடு நடத்தி இருக்கிறது. இதனை சிது மூஸ்வாலாவின் தாயார் வன்மையாக கண்டித்துள்ளார். இது போன்று சிலை வைப்பவர்களை எச்சரிக்கை செய்யவே இது போன்று துப்பாக்கிச்சூடு நடத்தியதாக லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் தெரிவித்துள்ளது.