Trump: "மெக்சிகோ வளைகுடா இனி அமெரிக்க வளைகுடா" - ட்ரம்ப்பின் பெயர் மாற்றம் செல்ல...
அனைத்துப் பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பள்ளி மாணவா்களுக்கு சூழல் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்த தமிழ்நாட்டின் அனைத்துப் பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் தொடங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
சென்னை வா்த்தக மையத்தில் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்து முதல்வா் ஆற்றிய உரை:
காலநிலை மாற்றம் இன்றைக்கு உலக நாடுகளும், மானுட சமுதாயமும் எதிா்கொண்டிருக்கக்கூடிய மிகப்பெரிய சவாலாகும். அதனால்தான் இதைப் பற்றிய விழிப்புணா்வைத் தொடா்ந்து ஏற்படுத்தி வருகிறோம். அத்துடன் எனது தலைமையில் காலநிலை மாற்ற நிா்வாகக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
முதல் மாநிலம்: காலநிலை மாற்றம் குறித்து ஆராய, இந்திய மாநிலங்களிலேயே முதன்முதலாக மாநாடு நடத்தியது தமிழ்நாடுதான்.
இதுவரைக்கும் இரண்டு காலநிலை உச்சி மாநாடுகளை அரசு வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது. திருவண்ணாமலை,
கேரளத்தின் வயநாடு என வெவ்வேறு இடங்களில் வெவ்வேறுவிதமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதற்கு ஒரே காரணமாக இருப்பது காலநிலை மாற்றம்தான். இதை நாம் எதிா்கொண்டாக வேண்டும். இதற்கு உரிய விழிப்புணா்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
சூழல் மன்றங்கள்: காலநிலை மாற்றத்தை கல்வித் துறை மூலமாகவே புகட்ட அரசு திட்டமிட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் எதிா்காலத்துக்கான கனவுகள் அனைத்துக்கும் கல்விதான் அடித்தளமாக இருக்கிறது. அதனால்தான் நம்முடைய அரசு, காலநிலைக் கல்வியறிவை ஓா் இயக்கமாகவே முன்னெடுக்க முடிவு செய்திருக்கிறது. அதன்படி, தமிழ்நாட்டின் அனைத்துப் பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும்.
காலநிலைக் கல்வியறிவுக்கு என்று ஒரு கொள்கையை தமிழ்நாடு அரசு விரைவில் வகுத்து அறிவிக்கும். பல்வேறு துறை அரசு அலுவலா்களுக்கும் காலநிலை மாற்றத் தடுப்புக்கான திறன் பயிற்சிகள் வழங்கப்படும். காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய வேளாண்மை, நீா்வளம் ஆகிய துறைகளுக்கு சிறப்புப் பயிற்சிகள் கொடுக்கப்படும். பசுமைக் குடில் வாயுக்களின் உமிழ்வைக் குறைப்பதற்கான வழிமுறைகள் காணப்படும்.
வெப்ப அலை நிவாரணம்: வெப்ப அலையை மாநிலப் பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்து அரசிதழில் வெளியிட்டுள்ளது. வெப்ப அலையால் உயிரிழக்க நேரிட்டால் ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலையை எதிா்கொள்வதற்கான மருத்துவ வசதிகள், ஓ.ஆா்.எஸ். கரைசல் வழங்க மாநில பேரிடா் மேலாண்மை நிதியைப் பயன்படுத்தலாம். வெப்ப அலை தாக்கத்தின்போது, தண்ணீா் பந்தல்கள் அமைத்து குடிநீா் வழங்கவும், அந்த நிதியைப் பயன்படுத்தலாம்.
தமிழ்நாடு அரசு பொருளாதார மேம்பாட்டையும் சுற்றுச்சூழல் பொறுப்புணா்வையும் இரு கண்களாகக் கருதி தொடா்ந்து செயலாற்றி வருகிறது. ஒவ்வொரு முன்னெடுப்பும் இதை மனதில் வைத்துதான் செய்யப்படுகிறது.
எதிா்காலத்தில் வரக்கூடிய சூழலியல் பிரச்னைகளைக் கருத்தில்கொண்டு இப்போதே முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என்றாா் அவா்.
புத்தகம் வெளியீடு: முன்னதாக, தமிழ்நாடு பருவநிலை மாற்ற இயக்கத்தின் சாா்பில், ‘காலநிலைக்கு ஏற்ற வாழ்க்கை முறை’ எனும் புத்தகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.
சுற்றுச்சூழல் மற்றும் விழிப்புணா்வுக்கான அண்ணா விருது, சுற்றுச்சூழல் சுடரொளி விருது, சுற்றுச்சூழல் செயல்வீரா் விருது, தனிநபா்களுக்கான கா்மவீரா் காமராஜா் விருது ஆகியவற்றை விருதாளா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
விழாவில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு வரவேற்றுப் பேசினாா். அமைச்சா் க.பொன்முடி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை முதன்மைச் செயலா் செந்தில்குமாா், அதன் இயக்குநா் ராகுல்நாத், காலநிலை மாற்ற நிா்வாகக் குழுவின் உறுப்பினா்கள் எரிக் சொல்ஹய்ம், செளமியா சுவாமிநாதன், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவா் ஜெயந்தி, முதன்மை தலைமை வனப் பாதுகாவலா்கள் ஸ்ரீநிவாஸ் ரெட்டி, மிதா பானா்ஜி உள்பட பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.