செய்திகள் :

அன்று `கூட்டணி’ கணக்கில் தொடங்கிய 'ராமதாஸ், அன்புமணி' மோதல் - பிரச்னையும் பின்னணியும்

post image

கடந்த 28.12.2024 அன்று விழுப்புரம், பட்டானூரில் பா.ம.க-வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ராமதாஸ், "கட்சியின் இளைஞர் அணித் தலைவராக இன்று முதல் முகுந்தன் பரசுமரான் நியமிக்கப்படுகிறார். மருத்துவர் அன்புமணிக்கு உதவியாக முகுந்தன் செயல்படுவார்" என்றார்.

பொதுக்குழு கூட்ட மேடையில் மருத்துவர் ராமதாஸ் - அன்புமணி

அப்போது மைக்கை எடுத்த அன்புமணி, "அவன் கட்சியில் சேர்ந்து நான்கு மாதங்கள் ஆகின்றன. அவனுக்கு இளைஞர் சங்கத் தலைவர் பதவியா... என்ன அனுபவம் இருக்கிறது, கட்சியில் அனுபவம் வாய்ந்தவர்களுக்குப் பதவி கொடுங்கள். ஏற்கெனவே பா.ம.க மீது குடும்பக் கட்சி என்ற விமர்சனம் இருக்கிறது" எனக் கொதித்தார். இதில் சூடான ராமதாஸ், "கட்சியில் யாராக இருந்தாலும் நான் சொல்வதைக் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்காவிட்டால் இந்தக் கட்சியில் யாரும் இருக்க முடியாது. இது நான் உருவாக்கிய கட்சி" என பதிலடி கொடுத்தார்.

மீண்டும் கடுப்பான அன்புமணி, "சரி, சரி" என்றார். இதில் கோபத்தின் உச்சிக்கே சென்ற ராமதாஸ், "மீண்டும் சொல்கிறேன். மாநில இளைஞர் சங்கத் தலைவராக முகுந்தன் பரசுராமன் நியமிக்கப்படுகிறார்" என்றார். உடனே தன் கையில் இருந்த மைக்கை அன்புமணி கீழே தூக்கி போட்டார். கடும் கோபத்துடன் மீண்டும் மைக்கை பிடித்தவர், "பனையூரில் அலுவலகம் ஒன்றை திறந்துள்ளேன். அங்கு என்னைத் தொண்டர்கள் சந்திக்கலாம்" என்றார்.

ஜி.கே.மணி

அப்போது ராமதாஸ், "முகுந்தன் பதவியை யாராலும் மாற்ற முடியாது. அதில் விருப்பம் இல்லையென்றால்" என பேசிக்கொண்டிருந்தார். உடனே கூட்டத்தின் ஒருபகுதியினர், "கட்சியை விட்டுப் போகலாம்" என கூச்சலிட்டனர். அதனை ஆமோதிப்பது போல், `அவ்ளோ தான்’ என்றார் ராமதாஸ். தொடர்ந்து பேசிய ராமதாஸ், "நான் தொடங்கிய கட்சி இது. நான் சொல்வதைத் தான் செய்ய வேண்டும். இதில் விருப்பம் இல்லாதவர்கள் விலகிக் கொள்ளலாம்" என்றார். உடனே அன்புமணி வெளியேறினார்.

இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பா.ம.க ஊடகப் பிரிவு இளைஞரணித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதுடன், இளைஞரணித் தலைவர் பொறுப்பை தான் ஏற்கவில்லை என முகுந்தன் கூறியதாகத் தகவல் வெளியானது. மறுபக்கம் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ராமதாஸ், அன்புமணியை சந்தித்து சமரச முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து தைலாபுரத்துக்கு வந்து ராமதாஸை சந்தித்து பேசினார், அன்புமணி.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

பிறகு செய்தியாளர்களிடம் பேசியவர், "கட்சியின் வளர்ச்சி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகம், சித்திரை முழு நிலவு மாநாடு, 10.5 சதவீத இடஒதுக்கீடு போன்றவை குறித்து பேசினோம். பா.ம.க ஜனநாயகக் கட்சி. அதனால், பொதுக்குழுவில் காரசார விவாதம் நடப்பது இயல்புதான். இது உட்கட்சிப் பிரச்னை. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உட்கட்சிப் பிரச்னை குறித்து மற்றவர்கள் பேச வேண்டிய அவசியமில்லை" என்றார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தைலாபுரம் தோட்டத்துக்கு நெருக்கமான சிலர், "மருத்துவர் ராமதாஸின் மூத்த மகளான ஸ்ரீகாந்தியின் மகன்தான் முகுந்தன். இவர் சமீபத்தில்தான் பா.ம.க-வில் இணைக்கப்பட்டார். அன்புமணிக்கு செக் வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை ராமதாஸ் எடுத்தார் என்றெல்லாம் பேச்சு கட்சிக்குள் பேச்சு ஓடியது. அதாவது ராமதாஸ் காலத்திலிருந்து கட்சியில் இருப்பவர்களை அன்புமணி ஓரம் கட்டி வருகிறார். இதற்கு வேல்முருகன், ரவிராஜ் என பலரை உதாரணம் சொல்ல முடியும்.

மருத்துவர் ராமதாஸுடன் முகுந்தன்

சமீபத்திய எடுத்துக்காட்டு ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் விவகாரத்தை எடுத்துக்கொள்ளலாம். அதாவது ஜி.கே.மணியிடம் இருந்த தலைவர் பதவியைத்தான் அன்புமணிக்கு கொடுத்தார், ராமதாஸ். அதற்காக அவரின் மகன் தமிழ்க்குமரனுக்கு மாநில இளைஞரணி தலைவர் பதவியை வழங்கினார், ராமதாஸ். இது அன்புமணி தரப்புக்கு பிடிக்கவில்லை. இதனால் அவருக்கு தொடர் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து தனது பதவியை தமிழ்க்குமரன் ராஜினாமா செய்தார்.

வெளிநபர்களை கட்சி பதவிக்கு கொண்டுவந்தால் அன்புமணி நெருக்கடி கொடுக்கிறார் என்பதால்தான் சொந்த குடும்பத்தில் இருந்து ஒருவரை கொண்டுவர ராமதாஸ் திட்டமிட்டார். அதற்குத்தான் தனது பேரன் முகுந்தனை கட்சிக்குள் கொண்டுவந்தார். முன்னதாக கூட்டணி முடிவுகளை எடுப்பதில் இருவருக்கும் இடையில் மோதல் இருக்கிறது. முதல்முறையாக இந்த பிரச்னை கடந்த பிப்ரவரியில்தான் பெரிதாக வெடித்தது.

பாஜக

அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ், "எனக்கு 85 வயதுதான். ஒரு குறிப்பிட்ட வயதில் ஓய்வு என்பது ஊதியத்துக்காக வேலை செய்பவர்களுக்குத்தான். நான் ஊதியத்திற்காக உழைப்பவன் அல்ல. ஊமை ஜனங்களுக்காக உழைப்பவன். தமிழ்நாட்டில் ஊமை ஜனங்கள் கல்வியிலும், வேலைவாய்பிலும் முன்னேறி விட்டால் நிம்மதியாக ஓய்வெடுக்க செல்வேன். இன்றைய சூழலில் என்னால் ஓய்வெடுத்து ஒதுக்கியிருக்க முடியாது" என வெளிப்படையாகவே பேசியிருந்தார்.

இதற்கு கூட்டணி குறித்த முடிவை தான் எடுக்கிறேன் என அன்புமணி கூறியதுதான் காரணம். ஆனாலும் மேடையில் வெளிப்படையாக ராமதாஸ் பேசியும் அன்புமணி கண்டுகொள்ளவில்லை. அதாவது பா.ஜ.க பக்கம் சென்றால் மீண்டும் மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என அன்புமணி கணக்கு போட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் ராமதாஸின் முடிவு அதிமுக பக்கம் செல்லவேண்டும் என்பதாக இருந்தது. இறுதியாக அன்புமணி நினைத்ததுதான் நடந்தது. ஆனால் இறுதியில் ராமதாஸ் தெரிவித்தது போலவே தோல்விதான் கிடைத்தது.

பாமக

பிறகு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சமூக ரீதியாக பலம் இருப்பதால் எப்படியும் வெற்றிபெறலாம் என ராமதாஸ் களமிறங்கினார். ஆனால் அண்ணாமலை செய்த, அ.தி.மு.க எதிர்ப்பு பிரசாரம் உள்ளிட்ட காரணங்களால் இடைத்தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. இதனால்தான் முகுந்தனை கொண்டுவந்து கட்சிக்குள் அன்புமணிக்கு செக் வைக்க ராமதாஸ் திட்டமிட்டார். ஆனால் அதுவும் நடக்கவில்லை. இதனால் பாட்டாளிகள் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார்கள்" என்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், "ராமதாஸ் போட்ட உத்தரவு கட்சி மேடையில் வேண்டுமானாலும் எடுபடும். ஆனால் தலைவர் என்கிற முறையில் அன்புமணியிடம்தான் அனைத்து அதிகாரமும் இருக்கிறது. 'தான் உருவாக்கிய கட்சி' என ராமதாஸ் சொல்வதையெல்லாம் தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொள்ளாது. அப்பா என்பதற்காகவே அன்புமணி அமைதியாக இருக்கிறார். குடும்பம், கட்சியில் இருந்து வந்த நெருக்கடியின் காரணமாகவே ராமதாஸை சந்தித்து பேசினார் அன்புமணி. அப்போது அண்புமணியிடம் முகம் கொடுத்துக்கூட ராமதாஸ் பேசவில்லை. மேடையில் அவமானப்படுத்திய கோபம் அப்படியே இருக்கிறது.

குபேந்திரன்

இந்த சந்திப்பு இப்போது நடந்திருக்கக்கூடாது. உட்கட்சி பிரச்சினையை யாரும் விவாதிக்க வேண்டாம் என ராமதாஸ் சொல்கிறார். வீட்டுக்குள் விவாதிருந்தால் யாரும் வெளியில் விவாதம் செய்ய மாட்டார்கள். இதனால் சமூக வலைத்தளங்களில் கடுமையான கேலிக்கு உள்ளாவார்கள். ராமதாஸ் குறித்து முதல்வர் விமர்சனம் செய்த நேரத்தில் கடுமையாக எதிர்வினையாற்றியிருந்தார். அப்படியெல்லாம் செய்துவிட்டு பொதுமேடையில் இப்படி செய்திருக்க கூடாது.

அப்பாவின் பெயரை காப்பாற்றியிருக்க வேண்டும். பா.ஜ.க கொடுக்கும் அழுத்தத்தில்தான் இருவரும் இணைந்தார்கள் என்று சொல்ல முடியாது. அதேநேரத்தில் பா.ஜ.க கூட்டணியிலிருந்து ராமதாஸ் வெளியேறுவாரா என்பதையெல்லாம் தேர்தல் நேரத்தில் நடக்கும் நகர்வுகளை வைத்துத்தான் சொல்ல முடியும்" என்றார்.

பொங்கல் பரிசுப்பணம்: "அன்று அரசியல் செய்த ஸ்டாலின், இன்று அவியல் செய்கிறாரா?" - ஆர்.பி.உதயகுமார்

"வடகிழக்குப் பருவமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் கூட வழங்காமல் பூஜ்ஜியத்தை வழங்கியுள்ளார் மு.க.ஸ்டாலின்" என்று விமர்சித்துள்ளார் அ.த... மேலும் பார்க்க

”பேராவூரணி பேரூராட்சியில் ஊழல், வழக்கு தொடர்ந்த திமுக ஒப்பந்தராரர்”- ஆர்.காமராஜ்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சியில் நடைபெற்ற பல கோடி ரூபாய் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்தும், பேரூராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், அதிமுக சார்பில் பேராவூரணி வ... மேலும் பார்க்க

பெண்களை பெற்றோர்கள்தான் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும்; எல்லாமே அரசு செய்யமுடியாது - மதுரை ஆதீனம்

"ஒவ்வொரு பெண்ணின் பாதுகாப்புக்கும் போலீஸ் போட்டால், போலீசால் அந்த வேலை மட்டும்தான் பார்க்க வேண்டி வரும்" என்று மதுரை ஆதீனம் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை ஆதீனம் (ஃபைல் படம்)மதுரையில் நட... மேலும் பார்க்க

தமிழிசை டெல்லி விசிட்.. போராடும் அண்ணாமலை... பரபரக்கும் பாஜக முகாம்!

பா.ஜ.க-வில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். பிறகு உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். நடப்பாண்டுக்கான உறுப்பினர் சேர்க்கையைக் கடந்த 2.9.20... மேலும் பார்க்க

`பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்கிறோம்’ – வானதி சீனிவாசன்

புதுச்சேரி பா.ஜ.க-வின் நிர்வாக அமைப்புத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் செல்வகணபதி தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அகில இந்திய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், அம... மேலும் பார்க்க

கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு; "தணிக்கை செய்யாத தமிழக அரசே பொறுப்பு" - ராமதாஸ்

விக்கிரவாண்டியில் தனியார்ப் பள்ளியொன்றில், திறந்த நிலையிலிருந்த கழிவுநீர்த் தொட்டியில் மூன்றரை வயது தவறி விழுந்து பலியான சம்பவத்துக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறிய... மேலும் பார்க்க