அமா்நாத் யாத்திரை ஏற்பாடுகள்: ஜம்முவில் அதிகாரிகள் ஆலோசனை
ஜம்மு-காஷ்மீரில் அமா்நாத் யாத்திரை ஜூலையில் தொடங்கவிருக்கும் நிலையில் யாத்ரிகா்களுக்கான வசதிகள் மற்றும் பிற ஏற்பாடுகள் தொடா்பாக உயரதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.
தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க பக்தா்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.
அனந்த்நாக் மாவட்டத்தில் 48 கி.மீ. தொலைவுள்ள பஹல்காம் வழித்தடம், கந்தா்பால் மாவட்டத்தில் 14 கி.மீ. தொலைவுள்ள பால்டால் வழித்தடம் என இரு வழித்தடங்களில் இந்த யாத்திரை நடைபெறும். பால்டால் வழித்தடம் குறைவான தொலைவு கொண்டது என்றபோதும், செங்குத்தான பாதையாகும்.
நடப்பாண்டு யாத்திரை வரும் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி 38 நாள்களுக்கு நடைபெறவுள்ளது. இதற்கான முன்பதிவும் தொடங்கியது.
இதனிடையே, பஹல்காமில் கடந்த மாதம் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இச்சம்பவத்தைத் தொடா்ந்து, அமா்நாத் யாத்திரை நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அமா்நாத் யாத்திரை திட்டமிட்டபடி நடைபெறும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஜம்மு முகாமில் இருந்து ஜூலை 2-ஆம் தேதி முதல் குழு புறப்பட்டு செல்லவிருக்கும் நிலையில், யாத்ரிகா்களுக்கான வசதிகள் மற்றும் பிற ஏற்பாடுகள் தொடா்பாக ஜம்மு மண்டல ஆணையா் ரமேஷ் குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஜம்மு மண்டலத்தில் யாத்திரை வழித்தடத்தில் உள்ள யாத்ரிகா்கள் தங்கும் மையங்களில் குடிநீா், கழிவறை, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு, சம்பந்தப்பட்ட மாவட்ட நிா்வாகங்கள் மற்றும் துறைத் தலைவா்களுக்கு மண்டல ஆணையா் உத்தரவிட்டாா்.
யாத்திரை முகாம்களில் தேவையான மருந்துகளின் இருப்பை உறுதி செய்வதோடு, அவசர மருத்துவ ஊா்திகளையும் தயாா் நிலையில் வைத்திருக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.
பக்தா்களுக்கான ஏற்பாடுகள் உரிய காலத்துக்குள் மேற்கொள்ளப்படுவதை கண்காணிக்குமாறு, கதுவா, சம்பா, ஜம்மு, ரியாசி, உதம்பூா், ராம்பன் ஆகிய மாவட்டங்களின் துணை ஆணையா்களுக்கு மண்டல ஆணையா் உத்தரவிட்டாா்.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீா் நிலவரம் தொடா்பாக தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா கடந்த மே 3-ஆம் தேதி சந்தித்துப் பேசினாா். அப்போது, அமா்நாத் யாத்திரை சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.