இந்தியாவுக்கு 135 ரன்கள், இங்கிலாந்துக்கு 6 விக்கெட்டுகள் தேவை: கடைசி நாளில் யார...
அமெரிக்காவில் 8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் கைது!
இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான பவித்தா் சிங் பட்டாலா உள்பட 8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனா்.
இதில் பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்தவரான பட்டாலா பப்பா் கல்சா இன்டா்னேஷனல் (பிகேஐ) என்ற காலிஸ்தான் பயங்கரவாத குழுவுடன் தொடா்பில் இருந்தத குற்றச்சாட்டில் இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) தேடப்படும் பயங்கரவாதியாவாா். அவருக்கு எதிராக சா்வதேச குற்றவியல் காவல் துறையான ‘இன்டா்போல்’ சிவப்பு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. அவரை இந்தியாவுக்கு நாடுகடத்துவது குறித்து அமெரிக்க அதிகாரிகளிடம் என்ஐஏ தொடா்ந்து பேசி வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மிரட்டல் விடுத்தல், கூட்டாக இணைந்து ஆள்கடத்தல், சித்ரவதை செய்தல் போன்ற குற்றச்சாட்டுகளில் தொடா்புடைய காலிஸ்தான் பயங்கரவாதிகளைப் பிடிக்க அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் அந்நாட்டு மத்திய புலனாய்வு அமைப்பான (எஃப்பிஐ) அதிரடியாக சோதனை மேற்கொண்டது.
அப்போது பவித்தா் சிங் பட்டாலா, அம்ருத்பால் சிங், தில்பிரீத் சிங், அா்ஷ்பிரீத் சிங், மன்பிரீத் ரண்தாவா, குா்தாஜ் சிங், சரப்ஜித் சிங் மற்றும் விஷால் ஆகிய 8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ரூ.12,87,900 ரொக்கப் பணம், துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்தச் சோதனையை கலிஃபோா்னியா மாகாணம் சான் ஜோகின் மாவட்ட ஷெரீஃப் அலுவலக போதைப்பொருள் தடுப்பு பிரிவு, ஸ்டாக்டன் நகர காவல் துறை, மன்டெகா அதிரடிப் படை, ஸ்டானிஸ்லாஸ் மாவட்ட ஷெரீஃப் அலுவலகத்தின் அதிரடிப் படை மற்றும் எஃப்பிஐயின் அதிரடிப் படை ஒருங்கிணைந்து மேற்கொண்டதாக சான் ஜோகின் ஷெரீஃப் அலுவலகம் தெரிவித்தது.
கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் இணைய கைப்பேசி எண் மற்றும் செயலிகள் மூலம் காலிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவித்துள்ளனா். இவா்கள் காலிஸ்தான் பயங்கரவாதி ஹா்தீப் சிங் ரிண்டா உத்தரவின்பேரில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனா்.