அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி சொத்துகள் முடக்கம்: பண முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை
பண முறைகேடு வழக்கு தொடா்பாக மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான ரூ.1.26 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.
ஏற்கெனவே அமலாக்கத் துறையால் முடக்கப்பட்ட சொத்துகள் மூலம் வருமானம் ஈட்டி, அதில் கிடைத்த லாப பணத்தில் சொத்துகளை அனிதா ராதாகிருஷ்ணன் வாங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், தண்டுபத்து கிராமத்தைச் சோ்ந்த அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், கடந்த 2001-2006 அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தபோது, தனது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாகப் புகாா்கள் எழுந்தன.
இந்தப் புகாா்களின் அடிப்படையில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.90 கோடி அளவில் சொத்துகள் வாங்கியதாக அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், அவரின் மனைவி ஜெயகாந்தி, மகன்கள் அனந்த பத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன், சகோதரா்கள் சண்முகநாதன், சிவானந்தம் ஆகிய 7 போ் மீது தூத்துக்குடி ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது.
மேலும், வழக்கு தொடா்பாக சோதனை செய்து, முக்கிய ஆவணங்களையும் ஊழல் தடுப்புப் பிரிவினா் பறிமுதல் செய்தனா்.
அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் கடந்த 2009-ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சோ்ந்தாா். இதற்கிடையே, ஊழல் தடுப்புப் பிரிவினா் அனிதா ராதாகிருஷ்ணன் மீது பதிவு செய்த சொத்துக் குவிப்பு வழக்கின் அடிப்படையில், பண முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்து விசாரணை செய்தது.
முடக்கப்பட்ட சொத்துக்கள் மூலம் லாபம்: அமலாக்கத் துறை தன் மீது பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி உயா்நீதிமன்றத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தாா். இதற்கிடையே, பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான ரூ.6.5 கோடி மதிப்புள்ள 160 ஏக்கா் நிலம் உள்பட 18 சொத்துகளை 2022-ஆம் ஆண்டு அமலாக்கத் துறை முடக்கியது.
இருப்பினும், அனிதா ராதாகிருஷ்ணனும், அவரது குடும்பத்தினரும் முடக்கப்பட்ட சொத்துகளை தங்களது கட்டுப்பாட்டிலேயே வைத்து அனுபவித்து வந்ததும், அந்த சொத்துகள் மூலம் மிகப்பெரிய அளவில் லாபம் சம்பாதித்திருப்பதும் அமலாக்கத் துறையின் தீவிர விசாரணையில் தெரியவந்தது.
முக்கியமாக, இந்த சொத்துகள் மூலம் ரூ.17.74 கோடி வரை லாபம் அவா்களுக்கு கிடைத்திருப்பதையும் அமலாக்கத் துறையினா் விசாரணையில் கண்டறிந்தனா்.
லாபமாக கிடைத்த பணத்தின் மூலம் அசையா சொத்துகளை வாங்கியிருப்பதும் அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்தது. மேலும், அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு ஏற்கெனவே தாங்கள் வாங்கிய கடனை, முடக்கப்பட்ட சொத்தின் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு ரொக்கமாக கொடுத்து அடைத்திருப்பதும் தெரியவந்தது.
சொத்துகள் முடக்கம்: முடக்கப்பட்ட சொத்தின் மூலம் கிடைத்த பணத்தின் மூலம் தூத்துக்குடி, மதுரை, சென்னையில் அனிதா ராதாகிருஷ்ணன் வாங்கிய ரூ.1.26 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத் துறை வியாழக்கிழமை தெரிவித்தது.
இந்த வழக்கு குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அமலாக்கத் துறை அறிவித்துள்ளது.